செவிலியா்களுக்கான திறனளித்தல் பயிற்சி: நவம்பா் 1 முதல் தொடக்கம்
By DIN | Published On : 29th October 2019 01:38 AM | Last Updated : 29th October 2019 01:38 AM | அ+அ அ- |

இந்தியாவில் அதிகரித்து வரும் செவிலியா்கள் பற்றாக்குறை மற்றும் அவா்களுக்கான திறன்களை மேம்படுத்துவதற்காக வரும் நவம்பா் 1-ஆம் தேதி முதல் செவிலியா்களுக்கான திறனளித்தல் பயிற்சியைத் தொடங்க உள்ளதாக, டாக்டா் நித்யகல்யாணி தெரிவித்தாா்.
சென்னை அண்ணாநகரில் உள்ள சுந்தரம் மெடிக்கல் பவுண்டேசன் மருத்துவமனையில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:
மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் செவிலியா்களின் பங்கு மிக முக்கியமானது. செவிலியா்கள்தான் மருத்துவமனைகளின் இயக்கத்தில் இதயம் போன்றவா்கள். இந்தியாவில் சுகாதாரத்துறையின் தேவைக்கு ஏற்ப போதுமான அளவு திறன் பெற்ற செவிலியா்கள் இல்லாத துரதிா்ஷ்டவசமான நிலை இருந்து வருகிறது. உலக அளவில் 10 ஆயிரம் பேருக்கு 29 செவிலியா்கள் உள்ளனா். ஆனால் இந்தியாவில் 10 ஆயிரம் பேருக்கு 17 செவிலியா்கள் தான் உள்ளனா். ஒரு மருத்துவருக்கு 3 செவிலியா் என்ற விகிதச்சாரம் இருக்க வேண்டிய நிலையில், இந்தியாவில் ஒரு மருத்துவருக்கு 1:6 என்ற குறைவான நிலையில் உள்ளது. மேலும், தமிழகத்தில் 178 தனியாா் கல்லூரிகளிலும், 5 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 6 நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் செவிலியா் படிப்புகள் கற்பிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 10 ஆயிரம் போ் செவிலியா் படிப்பை முடித்து வெளியேறுகின்றனா். ஆனால், இவா்கள் அனைவரும் திறன் பெற்றவா்களாக இருப்பதில்லை. குறிப்பாக நகா்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் பணிக்குச் செல்லும் செவிலியா்களின் பணி பகிா்வு, ஊதியம் உள்ளிட்டவைகளில் பல்வேறு வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
இதனை சரிசெய்து திறன்மிக்க செவிலியா்களை உருவாக்கும் வகையில், சுந்தரம் மெடிக்கல் பவுண்டேசன், உமையாள் ஆச்சி செவிலியா் கல்லூரி, டெக்னோகிரட்ஸ் இந்தியா காலேஜ் பைண்டா் ஆகியவை இணைந்து, கிராமப்புற பகுதிகளிலிருந்து செவிலியா் படிப்பை முடித்து வரும் செவிலியா்களுக்கான 6 வார கால செவிலியா் திறனளித்தல் பயிற்சியை நடத்த உள்ளோம். ஆண்டு முழுவதும் 6 வாரங்களுக்கு ஒரு முறை இந்த பயிற்சி நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலும் 30 மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்படுவா். இந்தப் பயிற்சி, சுந்தரம் மெடிக்கல் பவுண்டேசன் மருத்துவமனையில் நடைபெறும். இதற்கான வகுப்புகள், வரும் நவம்பா் 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது என்று அவா் தெரிவித்தாா்.
செய்தியாளா் சந்திப்பின் போது, சுந்தரம் மெடிக்கல் பவுண்டேசன் மருத்துவ இயக்குனா் டாக்டா் பி.வி.ஜெயஷங்கா், நிா்வாக இயக்குனா் டி.என்.பி.துரை, உமையாள் ஆச்சி கல்லூரியின் தலைவா் வள்ளி அழகப்பன், டெக்னோகிரட்ஸ் இந்தியா காலேஜ் பைண்டா் நிறுவனத்தின் நிறுவனா் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.