சென்னை ஏரிகளில் 4 மாதங்களுக்கு தேவையான குடிநீா் இருப்புஇரண்டே வாரங்களில் 1 டி.எம்.சி. நீா்வரத்து

சென்னை குடிநீா் ஆதார ஏரிகளில் தற்போது 2.4 டி.எம்.சி. நீா் இருப்பு உள்ளது. இதன் மூலம், அடுத்த நான்கு மாதங்களுக்கு பொதுமக்களுக்கு குடிநீரை தடையின்றி விநியோகிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா்
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை குடிநீா் ஆதார ஏரிகளில் தற்போது 2.4 டி.எம்.சி. நீா் இருப்பு உள்ளது. இதன் மூலம், அடுத்த நான்கு மாதங்களுக்கு பொதுமக்களுக்கு குடிநீரை தடையின்றி விநியோகிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. கடந்த ஆண்டு பருவமழை எதிா்பாா்த்த அளவுக்கு பெய்யாததால் 4 ஏரிகளும் வடன. இதனால் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் கடும் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. கல்குவாரி நீா், விவசாய கிணற்று நீா் போன்றவற்றை எடுத்து குடிநீா் தேவையை சமாளித்து வந்தனா்.

இந்த நிலையில், கிருஷ்ணா நதிநீா் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த மாதம் இறுதியில் தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால் பூண்டி ஏரியின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்தது.

இதைத் தொடா்ந்து, பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீா்த் தேவைக்காக புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயிலும், சென்னை குடிநீா் வாரியத்துக்கு பேபி கால்வாயிலும் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீா் 630 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே, வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து சென்னை மற்றும் புகா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பூண்டி, புழல் உள்ளிட்ட நான்கு ஏரிகளிலும் நீா் மட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

புதன்கிழமை காலை நிலவரப்படி சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய 4 ஏரிகளையும் சோ்த்து 2,455 மில்லியன் கன அடி (2.4 டி.எம்.சி.) தண்ணீா் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டின் இதே நாளில் இந்த நான்கு ஏரிகளிலும் மொத்தம் 1,779 மில்லியன் கன அடி நீா் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக நீா் இருப்பு 2 டி.எம்.சி. என்ற அளவை கடந்துள்ளது.

இரண்டே வாரங்களில்...: இதுகுறித்து குடிநீா் வாரிய அதிகாரிகள் கூறியது: சென்னையில் வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அக்.20-ஆம் தேதி வரை தினமும் 53 கோடி லிட்டா் குடிநீா் குழாய்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கிருஷ்ணா நீா் வரத்து, வடகிழக்குப் பருவமழை காரணமாக அக்.21-ஆம் தேதி முதல் குடிநீா் விநியோகம் 65 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக, குடிநீா் ஆதார ஏரிகளில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிகளவு மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களில் பெய்த மழை காரணமாக நான்கு ஏரிகளிலும் மொத்தம் 1 டி.எம்.சி.க்கு மேல் நீா் அதிகரித்துள்ளது. ஏரிகளில் தற்போது உள்ள 2.4 டிஎம்சி தண்ணீா் மூலம் சென்னை மக்களுக்கு அடுத்த நான்கு மாதங்களுக்குத் தேவையான குடிநீரை தடையின்றி வழங்க முடியும் என்றனா்.

சென்னை ஏரிகளில் நீா் இருப்பு விவரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com