சென்னையில் 2,600 விநாயகர் சிலைகள் நாளை பிரதிஷ்டை!

விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னையில் இந்து இயக்கங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் 2,600 சிலைகள் திங்கள்கிழமை (செப்.2) பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
சென்னையில் 2,600 விநாயகர் சிலைகள் நாளை பிரதிஷ்டை!

விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னையில் இந்து இயக்கங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் 2,600 சிலைகள் திங்கள்கிழமை (செப்.2) பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.

இதையொட்டி நகர் முழுவதும் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி திங்கள்கிழமை (செப்டம்பர் 2) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்து இயக்கங்களின் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக கடந்த பல வாரங்களாக விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த சில நாள்களாக விநாயகர் சிலைகள், பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களுக்கு, அனுப்பி வைக்கும் பணியில் இந்து இயக்க நிர்வாகிகள் ஈடுபட்டு வந்தனர்.

சென்னையில் இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட 15 இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை வைப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றன. இந்த அமைப்புகளைத் தவிர்த்து குடியிருப்பு சங்கங்கள், சமூக நல அமைப்புகள் ஆகியவையும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு காவல்துறையிடம் இந்து அமைப்பினர் முறைப்படி அனுமதி பெற்று வருகின்றனர்.

இந்த ஆண்டு, சிலைகளைப் பிரதிஷ்டை செய்ய அனுமதி பெறுவதற்கு ஒற்றைச் சாளர முறை பின்பற்றப்பட்டதால், எளிதாக அனுமதி கிடைத்து வருவதாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை வரை 2,600 சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதில் தகுதியில்லாத சுமார் 200 விண்ணப்பங்களை சென்னை காவல்துறை நிராகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில் விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு நாள் உள்ளதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என போலீஸார் தெரிவித்தனர். ஏனெனில், கடந்த ஆண்டு கடைசி நேரம் வரை விநாயகர் சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

காவல்துறை கட்டுப்பாடு: அதேவேளையில், பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் 5 அடி உயரத்தில் இருந்து 10 அடி உயரம் இருக்க வேண்டும், களிமண்ணால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும், வேதிப் பொருள்களால் செய்யப்பட்ட சிலைகளை பிரதிஷ்டை செய்யக் கூடாது, அனுமதி பெற்ற இடத்திலேயே விநாயகர் சிலையை வைக்க வேண்டும், ஒலி பெருக்கிகளை அனுமதிக்கப்பட்ட நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும், சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடத்தில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இருக்கக் கூடாது, சிலைகளை பாதுகாப்பதற்காக விழாக்குழு சார்பில் சிலை பாதுகாப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என காவல் துறை சார்பில் 19 விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைக்கு உட்பட்டால் மட்டுமே, சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு காவல்துறையால் அனுமதி வழங்கப்படுகிறது.

பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதில் பதற்றமான பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதேபோல, விழாக் குழுவால் அமைக்கப்பட்டிருக்கும் சிலை பாதுகாப்பு குழுவினரும், சிலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com