சுடச்சுட

  

  டெங்கு காய்ச்சல்:  கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்

  By DIN  |   Published on : 13th September 2019 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன.
  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டும் அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்கென சிறப்பு மருத்துவக் குழுவினரும், செவிலியர்களும் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்களும், பிற வகையான காய்ச்சல் பாதிப்புகளும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
  இதையடுத்து, கொசுக்கள் மூலமாக பரவும் காய்ச்சல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது. அதன்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 
  அதேபோன்று கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு பாதிப்புக்குள்ளானோருக்கென 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, பிற வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 40 படுக்கைகள் கொண்ட வார்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையிலும் அத்தகைய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
  இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் டாக்டர் வசந்தாமணி கூறியதாவது: 
  டெங்கு காய்ச்சல் மற்றும் பருவ காலங்களில் பரவும் காய்ச்சல்களுக்கு அரசு மருத்துவமனைகளில் விரிவான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை பெறுவதற்கான  வார்டு  தொடங்கப்பட்டுள்ளது.
  டெங்கு பரிசோதனை மற்றும் ரத்தத் தட்டணுக்கள் பரிசோதனை ஆகியவை மருத்துவமனை ஆய்வகத்திலேயே மேற்கொள்ளப்பட்டு உடனடியாக சிகிச்சையளிக்கப்படுவதால், நோயாளிகள் விரைந்து குணமாகி வருகின்றனர் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai