மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க ரூ. 2,600 கோடியில் சிறப்புத் திட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் ரூ. 2,600 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.


பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் ரூ. 2,600 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
வடகிழக்குப் பருவமழை தொடக்கத்தையொட்டி, மாநகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை, மின்சாரத் துறை, ரயில்வே, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பல்வேறு துறை உயரதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டம் குறித்து மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
வடகிழக்குப் பருவமழை தொடக்கத்தையொட்டி, 15 மண்டலங்களில் செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அந்த மண்டலங்களில் எந்தப் பணி முன்னுரிமை அடிப்படையில் செய்ய வேண்டியது என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 
சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை வெள்ளத் தடுப்புக்காக உலக வங்கி நிதி உதவியுடன் அடையாறு மற்றும் கூவம் வடிநிலப் பகுதிகளில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பில் வடிகால் பணிகள் நடைபெற்றுள்ளன. ரூ. 350 கோடி மதிப்பில் சிறிய நீர்நிலைகள் முக்கிய நீர்நிலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மணலி மண்டலத்துக்கு உள்பட்ட சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 
இதில், அப்பகுதியில் தேங்கும் தண்ணீரை கொசஸ்தலை ஆற்றில் கலக்கும் வகையில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் சுற்றுச்சுவரை போதுமான அளவுக்கு இடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நீர்வழிப் பாதையை ஆக்கிரமிப்பாளர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்திருந்த சுமார் 15 ஆயிரம் பேர் மாறுவாழ்வு திட்டத்தின்கீழ் மறுகுடியமர்த்தப்பட்டுள்ளனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு முன்பு வரை சென்னை மாநகராட்சிப் பகுதியில் 1,100 பொது இடங்களில் மழை நீர் தேங்கி இருந்தது. அது தற்போது, குறைக்கப்பட்டு மழைக் காலங்களில் 105 இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கி உள்ளது. 
மழைநீர் வடிகால்வாய்களில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் சென்னை நீர்நிலைகள் புனரமைப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 2,600 கோடியில் பெருநகர சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சிறப்புத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. 
இந்தத் திட்டம் முடிவடையும்போது, மழைநீர் வடிகாலில் கழிவு நீர் கலப்பது முழுவதும் தடுக்கப்படும் என்றார். இந்தக் கூட்டத்தில், துணை ஆணையர்கள் கோவிந்தராவ், மதுசுதன்ரெட்டி, தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com