மருந்து வர்த்தகத்தில் அமெரிக்காவுடன் தடையில்லா ஒப்பந்தம்: உள்நாட்டு உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டிருப்பதை மறுபரிசீலனை செய்யுமாறு மருந்து உற்பத்தியாளர் சங்கங்கள் வலியுறுத்தியுள்

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டிருப்பதை மறுபரிசீலனை செய்யுமாறு மருந்து உற்பத்தியாளர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இதுதொடர்பாக அந்தச் சங்கத்தினரும், மருத்துவம் சார்ந்த பிற அமைப்பினரும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது:

மருந்து வர்த்தகத்தில் உலகளாவிய முக்கிய மையமாக இந்தியா விளங்கி வருகிறது. ஏறத்தாழ 2 கோடிக்கும் அதிகமான பிற நாடுகளைச் சேர்ந்த எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்தியாவில் இருந்து மருந்துகளும், சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

இங்குள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஆக்கப்பூர்வமாகவும், செயல் திறனுடனும் இயங்கி வருவதையே அது உணர்த்துகிறது. மேலும், உள்நாட்டு மருந்து தயாரிப்பாளர்கள், மூலக்கூறு மருந்துகளை உற்பத்தி செய்து குறைந்த விலையில் அவற்றை விநியோகிப்பதன் மூலம் தொற்றும் நோய்களும், தொற்றா நோய்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வர்த்தகத்தில் அமெரிக்காவுடன் தடையில்லா ஒப்பந்தத்தை மேற்கொள்வது குறித்து இந்தியா பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே, இந்தியாவின் மருத்துவச் சந்தையில் அமெரிக்க நிறுவனங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
ஒரு பக்கம் இங்கிருந்து பெரும் லாபம் ஈட்டும் அமெரிக்க மருந்து நிறுவனங்கள், மற்றொரு பக்கம் நமது நாட்டின் சட்டங்களையும், விதிமுறைகளையும் கடுமையாகச் சாடி வருகின்றன. குறிப்பிட்ட சில சலுகைகளை தங்களுக்கு மட்டும் வழங்குமாறும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான விலை நிர்ணயத்தில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ள நிலையில், காப்புரிமை விதிகளைத் தளர்த்திக் கொள்ளவும் அந்நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தியாவில் மூலக்கூறு மருந்துகளை பரவலாக்கவிடாமல் தடுக்கும் வேலைகளிலும், உள்நாட்டு உற்பத்தியாளர்களை வளர விடாமல் தடுக்கும் நடவடிக்கைகளிலும் அமெரிக்க நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

எனவே, அதை உணர்ந்து அமெரிக்காவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசுவதை இந்தியா தவிர்க்க வேண்டும். அவர்களது கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com