டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகள் சாவு

சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளான இரு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.


சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளான இரு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.
ஆனால், அக்குழந்தைகளின் இறப்புக்கு டெங்கு காரணம் அல்ல என்றும், உடல் ரீதியாக இருந்த வேறு சில பிரச்னைகளே உயிரிழப்புக்குக் காரணம் என்றும் மருத்துவமனை நிர்வாகங்கள் விளக்கமளித்துள்ளன.
மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்களும், பிற வகையான காய்ச்சல் பாதிப்புகளும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், மதுரவாயலைச் சேர்ந்த லோஹித் என்ற 8 மாத ஆண் குழந்தை, காய்ச்சல் காரணமாக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டது.
சிறுநீரகம், கல்லீரல் செயலிழப்பு மற்றும் மூளையில் ரத்தக் கசிவு ஆகியவற்றால் அக்குழந்தை பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதற்கிடையே, டெங்கு காய்ச்சல் பாதிப்பும் குழந்தைக்கு இருந்தது. இந்தச் சூழலில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு அக்குழந்தை இறந்தது.
அதேபோன்று, முகப்பேர் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (6) என்ற பெண் குழந்தை நிமோனியா மற்றும் வைரல் காய்ச்சல் பாதிப்பு காரணமாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அக்குழந்தை  திங்கள்கிழமை இறந்தது. உயிரிழக்கும்போது அக்குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் இறக்கவில்லை; ஏற்கெனவே வேறு சில பிரச்னைகளால் பாதிக்கப்பட்டதன் காரணமாகவே குழந்தைகள் உயிரிழந்தன என்று தெரிவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com