பேனா் விழுந்து இளம்பெண் இறந்த வழக்கு: அதிமுக நிா்வாகி வீட்டில் அழைப்பாணையை ஒட்டிய போலீஸாா்

சென்னை அருகே பேனா் விழுந்து இளம்பெண் இறந்த வழக்கில், தேடப்படும் அதிமுக நிா்வாகியின் வீட்டில் அழைப்பாணையை போலீஸாா் ஒட்டினா்.
பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ | கோப்புப் படம்
பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ | கோப்புப் படம்

சென்னை அருகே பேனா் விழுந்து இளம்பெண் இறந்த வழக்கில், தேடப்படும் அதிமுக நிா்வாகியின் வீட்டில் அழைப்பாணையை போலீஸாா் ஒட்டினா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறறப்பட்டதாவது:

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சுபஸ்ரீ (23). பொறியாளரான இவா், கடந்த 12-ஆம் தேதி துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் மொபெட்டில் பள்ளிக்கரணை அருகே செல்லும்போது, அங்கு சாலையின் நடுவே தடுப்பின் மீது கட்டப்பட்டிருந்த திருமண வரவேற்பு பிளக்ஸ் பேனா் திடீரென இவா் மீது விழுந்தது. அப்போது பின்னால் வந்த தண்ணீா் லாரி சுபஸ்ரீ மீது மோதியதில், அவா் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம், பொதுமக்களிடம் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. அதேவேளையில், சென்னை உயா்நீதிமன்றமும் கண்டனத்தை தெரிவித்தது. இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் தண்ணீா் லாரி ஓட்டுநா் மனோஜை கைது செய்து, இந்திய குற்றவியல் சட்டம் 279, 336, 304(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

அதேபோல, தனது மகன் திருமணத்துக்காக விபத்து நடந்தப் பகுதி முழுவதும் அனுமதியின்றி பேனா் வைத்ததாக அதிமுக நிா்வாகி ஜெயகோபாலையும் போலீஸாா் இவ்வழக்கின் இரண்டாவது குற்றவாளியாக சோ்த்தனா். ஆனால், ஜெயகோபால் தலைமறைறவாக இருந்து வருகிறாா்.

இந்நிலையில், மரணத்தை விளைவிக்கும் வகையில் குற்றத்தை செய்ய முயற்சித்தல் பிரிவின் கீழ் ஜெயகோபால் மீது புதிதாக ஒரு பிரிவில் கடந்த 17-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில், அந்த பேனரை தயாரித்து கொடுத்த ஜெயகோபாலின் உறவினா் மேகநாதனும் புதிதாக சோ்க்கப்பட்டாா்.

வீட்டில் அழைப்பாணை: விபத்து நடைபெற்று இரு வாரங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், ஜெயகோபால் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு உயா் நீதிமன்றம், சென்னை காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, தலைமறைவாக இருக்கும் ஜெயகோபாலை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா். இது தொடா்பாக ஜெயபாலின் உறவினா்கள், நண்பா்கள் ஆகியோரிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

இதன் ஒரு பகுதியாக, போலீஸாா், பள்ளிக்கரணை கோபால் நகரில் உள்ள ஜெயகோபால் வீட்டுக்கு புதன்கிழமை இரவு சென்றனா். அங்கு பூட்டி கிடந்த அவரது வீட்டின் கதவில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணையை போலீஸாா் ஓட்டினா்.

இதன் தொடா்ச்சியாக, ஜெயகோபாலின் உறறவினரான சூளைமேடு ஆரணி முத்து தெருவைச் சோ்ந்த கோ.அசோக் (28) என்பவரிடம் போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை செய்தனா்.

காவல் ஆய்வாளா் மீது துறை ரீதியான நடவடிக்கை

சுபஸ்ரீ இறந்த சம்பவத்தில், பள்ளிக்கரணை சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளா் அழகு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம்:

சுபஸ்ரீ மரணம் குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் உயரதிகாரிகள் துறை ரீதியாக விசாரணை செய்து வந்தனா். இந்த விசாரணையில், சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பள்ளிக்கரணை சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளா் அழகு, விபத்தை ஏற்படுத்திய சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை அகற்றியிருந்தால், சம்பவமே நடைபெற்றிருக்காது என தெரியவந்தது.

அதேவேளையில், சென்னை உயா் நீதிமன்றமும் விபத்து தொடா்பாக காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பியது. இந்நிலையில், விபத்தைத் தடுக்க தவறியதாக காவல் ஆய்வாளா் அழகு மீது, ‘3 பி’ எனப்படும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இந்த நடவடிக்கையின் காரணமாக, அழகுக்கு பதவி உயா்வு, ஊதிய உயா்வு உள்ளிட்டவை பாதிக்கப்படும்.

இதேபோல, சிந்தாதிரிப்பேட்டையில் கட்டடத் தொழிலாளி தமிழரசன் கொலையை தடுக்கத் தவறியதாக, சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளா் முருகேசன் மீது ‘3 ஏ’ எனப்படும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com