பள்ளிக்கரணை சதுப்புநிலத்துக்கு: வெளிநாட்டுப் பறவைகளின் வலசை தொடக்கம்

சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலம் புத்துயிர் பெற்றுள்ளதை உணர்த்தும் வகையில் வெளிநாட்டுப் பறவைகளின் வலசை காலம் தொடங்கி உள்ளது.
பள்ளிக்கரணை சதுப்புநிலத்துக்கு: வெளிநாட்டுப் பறவைகளின் வலசை தொடக்கம்

சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலம் புத்துயிர் பெற்றுள்ளதை உணர்த்தும் வகையில் வெளிநாட்டுப் பறவைகளின் வலசை காலம் தொடங்கி உள்ளது. இதன் முதற்கட்டமாக சுமார் 5 வகையான அரியவகை வெளிநாட்டுப் பறவைகள் பள்ளிக்கரணைக்கு வலசை வந்துள்ளன.

தென்சென்னையின் பள்ளிக்கரணையில் 649 ஹெக்டேர் பரப்பளவு சதுப்பு நிலம்  வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலப் பகுதியானது ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டாலும், இந்த நிலத்தை வாழ்விடமாகக் கொண்டு சுமார் 120-க்கும் மேற்பட்ட பறவை இனங்களும், 10-க்கும் மேற்பட்ட பாலூட்டி வகைகளும், 21 வகையான ஊர்வனவைகளும்,  10-க்கும் மேற்பட்ட நீர்வாழ் இனங்களும், 46 வகையான மீன் இனங்களும், 10 வகையான பட்டாம்பூச்சி இனங்களும் வாழ்ந்து வருகின்றன. 

அதுமட்டுமல்லாமல், பள்ளிக்கரணைக்கு மட்டும் ஆண்டுதோறும் சுமார் 54 வகையான வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருகின்றன. சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள கூழைக்கிடா, வர்ண நாரை, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், 4 வகையான வெண்நிற நாரைகள், வெள்ளை நிற அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பறவைகள் இங்கு அதிகம் காணப்படுகின்றன. 

வலசை தொடக்கம்: ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் அக்டோபர் மற்றும் தொடர்ச்சியான மாதங்களில் பனிக்காலம் என்பதாலும் பகல்பொழுது குறைவாவதுடன், உணவுப் பற்றாக்குறையும் ஏற்படும். எனவே, அங்குள்ள பறவைகள் உணவுக்காக ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் பள்ளிக்கரணைக்கு வலசை வரும். அதன்படி, இந்த ஆண்டு ஐரோப்பா, வட அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய  நாடுகளை வாழ்விடமாகக் கொண்ட 5 வகையான பறவை இனங்கள் பள்ளிக்கரணைக்கு செப்டம்பர் மாதத்தின் இறுதியில் வலசை வந்துள்ளன.

இதுகுறித்து தி நேச்சர் டிரஸ்ட் அறக்கட்டளையின் நிறுவனர் திருநரணன் கூறியதாவது: அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 6 மாதங்கள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வெளிநாட்டுப் பறவைகள் வலசை வரும் காலமாகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழை காரணமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் போதிய அளவு நீர் இருப்பு உள்ளது. வெளிநாட்டுப் பறவைகளின் வலசை வரும் காலத்தின் தொடக்கமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சாதா உள்ளான் (common sandpiper), பேதை உள்ளான் (ruff), பொறி மண்கொத்தி உள்ளான் (wood sandpiper) போன்ற வெளிநாட்டுப் பறவைகள் வலசை வந்தன. இதைத் தொடர்ந்து, அரிய வகை வெளிநாட்டுப் பறவைகளான ஐரோப்பா, ரஷியா உள்ளிட்ட நாடுகளில் காணப்படும் மஞ்சள் வாலாட்டி (yellow wagtail), நீலச்சிறகு வாத்து (garganey), தட்டைவாயன் (northern shoveler), பூனைப்பருந்து (western marsh harrier) ஜப்பான், சீனா, வடகொரியாவில் காணப்படும் சாம்பல் தலை ஆள்காட்டி (grey headed lapwing) ஆகிய 5 வகையான பறவைகள் வலசை வந்துள்ளன. இதில், கடந்த 26-ஆம் தேதி 2 மஞ்சள் வாலாட்டி பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, 4 சாம்பல் தலை ஆள்காட்டி, 7 நீலச்சிறகு வாத்து, 2 தட்டைவாயன் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. இனிவரும் காலத்தில்  வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்  கூடும் என்றார்.

ஆரோக்கிய சூழலியலின் அடையாளம்

பள்ளிக்கரணை சதுப்புநிலம் சூழலியல் தன்மையை இழக்கவில்லை என்பதற்கு  கரும்பச்சை இலைக்கோழி (bronze winged jacana) பள்ளிக்கரணையில் உள்ளதே உதாரணமாகும். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கரணையில் காணப்பட்ட கரும்பச்சை இலைக்கோழி அச்சுறுத்தல், உணவுப் பற்றாக்குறை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இங்கு வராமல் இருந்து வந்தது.

இந்நிலையில், போதிய உணவு, சூழலியல், பாதுகாப்பு ஆகியவை பள்ளிக்கரணையில் உள்ளதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கரும்பச்சை இலைக்கோழி மீண்டும் காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது, சுமார் 14 கரும்பச்சை இலைக்கோழிகள் பள்ளிக்கரணையில் இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல், பறவைகளை வேட்டையாடும் பூனைப்பருந்து வந்துள்ளதும் பள்ளிக்கரணையின் ஆரோக்கியமான சூழலியலுக்கு உதாரணமாக உள்ளது என்றார் திருநரணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com