நீட் தேர்வு முறைகேடுகள்: அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் கே.பழனிசாமி உறுதி

நீட் தேர்வுகளில் எங்கெல்லாம் முறைகேடுகள் நடந்திருக்கிறதோ அதனைக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்  என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.   
சேலம் மாவட்டம்,  ஓமலூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
சேலம் மாவட்டம்,  ஓமலூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

நீட் தேர்வுகளில் எங்கெல்லாம் முறைகேடுகள் நடந்திருக்கிறதோ அதனைக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்  என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.   

சேலம் மாவட்டம்,  ஓமலூரில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு குறை தீர்க்கும் திட்ட சிறப்பு முகாமில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களுக்கு முதல்வர் அளித்த பேட்டி: "யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற தமிழ்க் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் வரிகளை பிரதமர் ஐ.நா. சபையில் பேசியது மகிழ்ச்சியாக உள்ளது . இதனை தமிழர்களுக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன். 

நீட் தேர்வு முறைகேடுகளை தமிழக காவல்துறையினர்தான் கண்டுபிடித்துள்ளனர். எனவே, எங்கெல்லாம் முறைகேடு நடந்திருக்கிறதோ அதனைக் கண்டறிந்து அதில் ஈடுபட்டோர் மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும், இது மத்திய அரசு நடத்தும் தேர்வு. எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் ஏதும் ஏற்படாவண்ணம் அரசு விழிப்புடன் இருந்து செயல்படும்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தேவையின்றி ஒவ்வொரு திட்டத்தையும் குறை கூறி வருகிறார்.  என் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறினார். ஆனால்,  இதுவரையில் எதையும் நிரூபிக்கவில்லை.  

உச்சநீதிமன்றம் இதற்கான தடை விதித்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். திமுக ஆட்சியில்தான் ஏகப்பட்ட ஊழல்கள் நடந்தன. 

கீழடியில் முதல் மூன்று கட்ட ஆய்வுகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கியது.

நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட ஆய்வுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்று வருகின்றன.  கீழடிப் பகுதியில் நடந்து வரும் பணிகளை அமைச்சர் க, பாண்டியராஜன் நேரில் பார்வையிட்டுள்ளார்.  அந்தத் திட்டத்துக்குத் தேவையான நிதி உதவி செய்யப்படும்.

டிஎன்பிஎஸ்சி தன்னாட்சி பெற்ற அமைப்பு.    இதில் அரசு தலையிட முடியாது. அரசு தலையிட்டால்,  தன்னாட்சி அமைப்பில் அரசு தேவையின்றி தலையிடுகிறது என எதிர்க்கட்சியினர் குறை கூறுவர்.

கூட்டணி: மக்களவைத் தேர்தல் கூட்டணி உருவாகும்போதே இடைத் தேர்தல்களில் நாங்கள்தான் போட்டியிடுவோம் என்று ஏற்கெனவே அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் எங்களுடைய விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறோம். அதன்படி விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் மாயனூர் கதவணை தாங்கள்தான் கட்டியதாகக் கூறியது தவறு.  ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் மாயனூர் கதவணை கட்டப்பட்டது.  இதேபோன்று, குடிமராமத்துத் திட்டத்தையும் தாங்கள்தான் கொண்டு வந்ததாக திமுகவினர் கூறினர்.  ஆனால், அவர்கள் ஆட்சிக் காலத்தில் தூர்வாரும்  பணிகள்  எந்த இடத்திலும் நடைபெறவில்லை.  ஆனால்,  அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு மிகுந்த முக்கியத்துவம்அளிக்கப்பட்டு,  பல்வேறு பகுதிகளில் தூர்வாரப்பட்டுள்ளன.  83 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை தூர்வாரப்பட்டுள்ளது.  அதுபோல,  தமிழகத்தில் 40 ஆயிரம் ஏரிகள்,  குளங்கள் படிப்படியாகத் தூர் வாரப்பட்டு வருகின்றன என்றார் முதல்வர். 

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வீணாகக் கடலில் கலக்கிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, நம்முடைய நிலப்பரப்பு சமமான நிலப்பரப்பு. இரண்டு மலைகளுக்கிடையே இல்லை . அரை அல்லது ஒரு டி.எம்.சி. அளவு தண்ணீர் சேமித்து வைக்க ரூ. 500 கோடி செலவாகும். இதனால் நான்கு அல்லது ஐந்து இடங்களில் தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .  உபரி நீர் ஊருக்குள் சென்று விடாமல் இருக்கவும் பார்த்துக் கொள்ள வேண்டும்.  மேட்டூர் முதல் கொள்ளிடம் வரை தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சேலம்-அரூர் சாலையை விரிவுப்படுத்தி மேம்படுத்திட ரூ.247 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.  தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் இப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றார் முதல்வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com