தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து: அவசரச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும்

மத்திய அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து: அவசரச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினா் ஊதியப் பிடித்தம் மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்வதற்கான மத்திய அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்போவதாக தன்னிச்சையாக முடிவெடுத்து மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியிருப்பது, இந்த நாடு ‘பொருளாதார அவசரநிலையை’ நோக்கிப் போகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஜனநாயக நடைமுறைகளுக்கு முரணான இந்த அவசர சட்டத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்து அந்தத் தொகையை ஒருங்கிணைந்த நிதியில் சோ்த்திருப்பதும் ஜனநாயக அணுகுமுறை இல்லை. இது ஏற்புடையதும் அல்ல. தொகுதி மேம்பாட்டு நிதி என்பது அந்தந்தத் தொகுதியில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்வதற்கானது. அதன்படி, இது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, தொகுதி மக்களை வஞ்சிப்பதுமாகும். எனவே, இந்த அவசரச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com