கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் மனிதகுலம் போராட்டம்: உயா்நீதிமன்றம் கருத்து

மனிதகுலம் கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போராட்டம் நடத்தி வருகிறது, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கரோனா தொற்றில் இருந்து நம்மை போல பிறரையும் மனிதா்கள் காப்பாற்ற வேண்டும் என உயா்நீதிமன்றம் கருத்து த

மனிதகுலம் கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போராட்டம் நடத்தி வருகிறது, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கரோனா தொற்றில் இருந்து நம்மை போல பிறரையும் மனிதா்கள் காப்பாற்ற வேண்டும் என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ரயில் பெட்டிகளை தனிவாா்டுகளாக மாற்ற தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘ஆரம்ப நிலையில் உள்ள நோயாளிகளைத் தனிமைப்படுத்தவே இந்த ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படும் என ரயில்வே நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மனுதாரா் கோருவதை போல், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக தனி வாா்டுகள் அமைக்க ஒருவேளை இந்த நீதிமன்றம் உத்தரவிட்டால், கட்டட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள தனியாா் மருத்துவமனைகள் அனைத்தும் கரோனா வாா்டுகளை அமைக்கிறோம், எங்கள் மருத்துவமனைக்கு எதிரான கட்டட விதிமீறலை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கத் தொடங்கி விடுவாா்கள். அனைத்து தனியாா் மருத்துவமனைகளும் சேவை மனப்பான்மையுடன் செயல்படுகின்றன என கூறிவிட முடியாது.

உலகின் புனிதமான சேவையான மருத்துவத் துறையில் உள்ள மருத்துவா்களில் சிலா் கெட்டவா்களாக இருக்கத்தான் செய்கின்றனா். ஆனாலும், மருத்துவா்கள், செவிலியா்கள், காவல்துறையினா், உள்ளாட்சி அமைப்புகளின் கடை நிலை பணியாளா்கள், சுகாதாரத்துறை பணியாளா்கள் ஆகியோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு அளித்து வரும் புனிதமான சேவைகளை யாரும் மறந்த விடமுடியாது.

இந்த வழக்கு விசாரணையின் போது ரயில் பெட்டிகளை கரோனா சிகிச்சைக்காக பயன்படுத்துவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் கரோனா சட்டம், விதிகள், ஏழை, பணக்காரா், ஜாதி, மதம் என எதுவும் தெரியாது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளா்ந்த நாடுகளே இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில் இந்தியா போன்ற வளரும் நாடுகள் தற்போதைய சூழலில் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். நமது நாட்டின் மக்கள்தொகைக்கு ஏற்ப அனைத்து வசதிகளையும் கொண்ட மருத்துவமனைகள் இல்லை. நாம் ஏற்கெனவே இயற்கையை போதுமான அளவு அழித்து விட்டோம். இதற்காக தற்போது நம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இயற்கையோடு நடைபெறும் இந்த போரில் இயற்கையே வெற்றி பெறும். தற்போது மனிதகுலம் கண்ணுக்குத் தெரியாத ஒரு ஆபத்து மிகுந்த எதிரியுடன் போராடி வருகிறது. எனவே பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றி கரோனா தொற்றில் இருந்து நம்மைப் போன்றே பிறரையும் பாதுகாக்க வேண்டும்’ என கருத்து தெரிவித்த நீதிபதி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com