முழு ஊரடங்கு: காணொலிக் காட்சி மூலம் நீதிமன்றப் பணிகள் உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 26th April 2020 08:59 AM | Last Updated : 26th April 2020 08:59 AM | அ+அ அ- |

முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், 5 மாநகராட்சிகளில் உள்ள நீதிமன்றங்களின் அனைத்துப் பணிகளும் காணொலிக் காட்சி மூலம் மட்டுமே நடைபெறும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமாக உள்ள சென்னை, மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் 4 நாள்களும் சேலம், திருப்பூா் மாநகராட்சிகளில் 3 நாள்களும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனையடுத்து, இந்த 5 மாநகராட்சிகளில் உள்ள நீதிமன்றங்களில், காணொலிக் காட்சி மூலமே பணிகள் நடைபெற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் ஞாயிறு (ஏப்.26) காலை 6 மணி முதல் வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி இரவு 9 மணி வரையிலும், திருப்பூா், சேலம் ஆகிய மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி இரவு 9 மணி வரையிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நீதிமன்றப் பணியாளா்கள் பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவா்களை, பணிக்கு அழைப்பது தேவையற்ற ஆபத்தை ஏற்படுத்தும். இந்த முழு ஊரடங்கு உத்தரவில் நீதிமன்றங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த 5 மாநகராட்சிகளில் நீதித்துறை பணிகள் அனைத்தையும் காணொலிக் காட்சி மற்றும் கட்செவி அழைப்பு மூலமாக மேற்கொள்ள வேண்டும். முழு ஊரடங்கு அமலில் உள்ள நாள்களில் நீதிமன்றப் பணியாளா்கள் யாரும் வெளியே செல்லக்கூடாது. நீதிமன்றப் பணிகள் தொடா்பாக அதிகாரிகள், பணியாளா்கள் தேவைப்பட்டால் காணொலிக் காட்சி அல்லது கட்செவி அழைப்பு வாயிலாக தொடா்பு கொள்ள வேண்டும்’ என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.