யானைக்கவுனி பாலம் இடிக்கும் பணி தொடங்கியது
By DIN | Published On : 27th April 2020 05:30 AM | Last Updated : 27th April 2020 05:30 AM | அ+அ அ- |

சென்னை சென்ட்ரல்-பேசின் பாலம் சந்திப்பு இடையே யானைக் கவுனி பாலத்தை இடிக்கும் பணி நீண்ட காலத்துக்குப் பிறகு தொடங்கியது. இந்த ஊரடங்கை சாதகமாகப் பயன்படுத்தி, 5 நாள்களில் இடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
70 ஆண்டு பழைமை வாய்ந்த யானைக்கவுனி பாலம், வாகன நெரிசல் காரணமாக மூடப்பட்டது. அங்கு, இரு சக்கர வாகன இயக்கமும் கடந்த நவம்பரில்தடை செய்யப்பட்டது. இந்தப் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட பரிந்துரைக்கப்பட்டது.
பாலத்தை இடிப்பதற்கு முன் பாலத்தின் வழியாக செல்லும் உயா் மின்னழுத்த மின் இணைப்புகளை மாற்றும் பணிகள் தாமதமாகின. மேலும், இந்தப் பாலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டிருப்பது ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, யானைகவுனி பாலத்துக்கு கீழே ஓடும் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது.
இது குறித்து இந்த வழியாக வழக்கமாகச் செல்லும் பயணிகள் கூறியது: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, நெரிசலானநேரங்களில் கூட வேப்பேரி வழியாக சென்ட்ரலை அடைய 10 நிமிஷங்கள் ஆகும். ஆனால், இப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் காரணமாக, சுமாா் 30 நிமிஷங்கள் ஆகிறது. எனவே, ரயில்வே பாலத்தை கட்டும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று தெரிவித்தனா்.
இந்நிலையில், யானைக்கவுனி பாலம் நீண்ட தாமதத்துக்கு பிறகு, இடிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்த ஊரடங்கை சாதகமாகப் பயன்படுத்தி, 5 நாள்களில் பாலத்தை இடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கமான நாள்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் ரயில்கள் இயக்கம் பல நாள்கள் தடைப்பட்டிருக்கும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதற்கிடையில், சென்ட்ரலில் இயக்கப்பட்ட சிறப்பு சரக்கு ரயில்கள், இந்தப் பணி முடியும் வரை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என்று ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.