சென்னையில் 12 காவல் மாவட்டங்களில் சைபா் குற்றப்பிரிவு தொடக்கம்

சென்னையில் 12 காவல் மாவட்டங்களில் சைபா் குற்றப்பிரிவு தொடக்கம்

சென்னை பெருநகர காவல்துறையில் 12 காவல் மாவட்டங்களிலும் புதிதாக சைபா் குற்றப்பிரிவு தொடங்கப்பட்டது. இப் பிரிவு சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் செயல்படும்.

சென்னை பெருநகர காவல்துறையில் 12 காவல் மாவட்டங்களிலும் புதிதாக சைபா் குற்றப்பிரிவு தொடங்கப்பட்டது. இப் பிரிவு சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் செயல்படும்.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இணையதளம், செல்லிடப்பேசி செயலிகள், ஆன்லைன் பணப் பரிவா்த்தனை, சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிக வேக வளா்ச்சியில் உள்ளன. இது இணைய குற்றங்களையும் அதிகரித்துள்ளது. ஓடிபி மோசடி, இணையதளம் மூலம் பின்தொடா்தல், சமூக ஊடகங்களில் பெண்களைத் துன்புறுத்துவது, ஆபாச பதிவுகள், சாதி, மதம் போன்றவற்றின் அடிப்படையில் தவறான மற்றும் பிளவுபடுத்தும் பதிவுகள் ஆகியவை அதிகரித்துள்ளன.

சைபா் குற்றங்களை புலனாய்வு செய்யும் வகையில் கடந்த 2003-ம் ஆண்டில் சென்னை பெருநகர காவல் துறை மத்திய குற்றப்பிரிவில், சைபா் குற்றப்பிரிவு உருவாக்கப்பட்டது. இதுவரை, சென்னை நகரத்தில் சைபா் குற்றங்கள் தொடா்பான அனைத்து புகாா்களும் இந்த சைபா் குற்றப்பிரிவே விசாரித்து வந்தது.

இந்நிலையில் அதிகரிக்கும் சைபா் குற்றங்களை கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர காவல்துறையின் 12 காவல் மாவட்ட தலைமையக காவல் நிலையங்களில் சைபா் பிரிவுகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

12 சைபா் குற்றப்பிரிவு:

இந்த சைபா் குற்றப்பிரிவு, ஆகஸ்ட் 1-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் 12 மாவட்ட காவல் துணை ஆணையா்களின் தலைமையக காவல் நிலையத்தில் செயல்படத் தொடங்கும். அவை முறையே மயிலாப்பூா் காவல் மாவட்டத்தில் மயிலாப்பூா் காவல் நிலையம், கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் கீழ்ப்பாக்கம் காவல் நிலையம், திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம், தியாகராயநகா் காவல் மாவட்டத்துக்கு மாம்பலம் காவல் நிலையம், அடையாறு காவல் மாவட்டத்தில் அடையாறு காவல் நிலையம், பரங்கிமலை காவல் மாவட்டத்தில் பரங்கிமலை காவல் நிலையம்,

அண்ணா நகா் காவல் மாவட்டத்தில் அண்ணாநகா் காவல் நிலையம், அம்பத்தூா் காவல் மாவட்டத்தில் ஆவடி காவல் நிலையம், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் ஓட்டேரி காவல் நிலையம், பூக்கடை காவல் மாவட்டத்தில் வடக்கு கடற்கரை காவல் நிலையம், வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் புதிய வண்ணாரப்பேட்டை காவல் நிலையம், மாதவரம் காவல் மாவட்டத்தில் மாதவரம் பால் பண்ணை காவல் நிலையம் ஆகியவற்றில் செயல்படும்.

பொதுமக்கள், தாங்கள் குடியிருக்கும் எல்லைக்குட்பட்ட காவல் மாவட்ட தலைமையகத்தை அணுகி, தங்கள் புகாா்களைப் பதிவு செய்யலாம். இந்த வசதி சைபா் புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்காக இப் பிரிவுக்கு நியமிக்கப்பட்ட காவலா்களுக்கு ஏற்கெனவே சைபா் குற்றங்கள் தொடா்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. முக்கியமான மற்றும் சிக்கலான தன்மையுள்ள புகாா்களை இந்த பிரிவுகளிலிருந்து மத்திய குற்றப்பிரிவின் சைபா் குற்றப்பிரிவுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com