ஆன்லைன் வகுப்புகள்: வழக்கு விசாரணை குறித்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை கோரிய வழக்கு விசாரணையில் தனியார் பள்ளிகள், பெற்றோர் சங்கங்கள் பங்கேற்கும் வகையில் வழக்கு விசாரணை குறித்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட வேண்டும் என
ஆன்லைன் வகுப்புகள்: வழக்கு விசாரணை குறித்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆன்லைன் வகுப்புகள்: வழக்கு விசாரணை குறித்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை கோரிய வழக்கு விசாரணையில் தனியார் பள்ளிகள், பெற்றோர் சங்கங்கள் பங்கேற்கும் வகையில் வழக்கு விசாரணை குறித்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டது.இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. ஆன் லைன் மூலம் வகுப்புக்களில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவர்களுக்குக் கவனம் சிதறல் ஏற்படுகிறது.  எனவே மாணவ மாணவிகள் ஆபாச இணையதளங்களை  பார்ப்பதைத் தடுக்கும் வகையில், சட்ட விதிகளின்படி, முறையான விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புக்களை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். 

இதேபோல, ஆன் லைன் வகுப்புக்களை மொபைல் மூலமும், லேப் டாப் மூலமும் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை ஆன் லைன் வகுப்புக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும், 6 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புக்கள் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி விமல் மோகன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குப்படுத்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, மழலையர் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக் கூடாது. 1-ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை   ஒவ்வொரு பாடவேளையும் 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். நாளொன்றுக்கு , ஒரு ஆசிரியர் , 6 வகுப்புகளும்,  வாரத்துக்கு 28 ஆன்லைன் வகுப்புகள் எடுக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகள்  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த வேண்டும். எல்கேஜி,  யுகேஜி உள்ளிட்ட மழலையர் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 30 முதல் 45 நிமிடங்கள் 2 பாடவேளைகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை , 30 முதல் 45 நிமிடங்களுக்கு 4 பாடவேளைகள் நடத்தப்பட வேண்டும். ஆன்லைன் வகுப்புகளுக்கு குழந்தைகளை கட்டாயப்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. 

அப்போது மனுதாரர்கள் தரப்பில் இந்த விதிமுறைகள் வெறும் பரிந்துரை அடிப்படையில் உள்ளது. இதனை அமல்படுத்த முடியாது என  தெரிவிக்கப்பட்டது. மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் அரசாணையில் இடம் பெற்றுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக் கொண்டனர். மேலும்  இந்த வழக்கு மாணவர்களின் நலன் சார்ந்தது மட்டுமல்ல. ஆன்லைன் வகுப்புகளால் அனைத்து தரப்பு மாணவர்களும் பயன் பெறும் வகையில் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்ற வேண்டும். எனவே இந்த வழக்கில், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும், பெற்றோர் சங்கங்களும் தகவல் தெரிவிக்கும் வகையில், ஆங்கிலம், தமிழ் நாளிதழ்களில் இந்த வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 19- ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என விளம்பரம் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை  ஆகஸ்ட் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும், ஆன் லைன் வகுப்புக்கள் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com