சென்னை துறைமுகப்புக் கழக வங்கிக் கணக்கில் ரூ.45 கோடி மோசடி: சிபிஐ 8 பிரிவுகளில் வழக்கு

சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் வங்கி கணக்கில் ரூ.45 கோடி மோசடி செய்யப்பட்டது குறித்து சிபிஐ 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை துறைமுகப்புக் கழக  வங்கிக் கணக்கில் ரூ.45 கோடி மோசடி: சிபிஐ 8 பிரிவுகளில் வழக்கு

சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் வங்கி கணக்கில் ரூ.45 கோடி மோசடி செய்யப்பட்டது குறித்து சிபிஐ 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.

இது குறித்து சிபிஐ தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், கோயம்பேடு காளியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளையில் ரூ.100 கோடி முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் கடந்த மாா்ச் மாதம் 10-ஆம் தேதி இந்த வங்கி கிளைக்கு துறைமுக பொறுப்புக் கழகத்தின் நிதிப் பிரிவு துணை இயக்குநா் கணேஷ் நடராஜன் என்பவரும், ஊழியா் என்று கூறி மணிமொழி என்பவரும் வந்துள்ளனா்.

இவா்கள் இருவரும், துறைமுக பொறுப்புக் கழகம் முதலீடு செய்துள்ள ரூ.45 கோடியை நடப்புக் கணக்குக்கு மாற்ற வேண்டும், ரூ.50 கோடியை நிரந்தர வைப்புத் தொகையாக வைக்க வேண்டும் என கூறினராம். இதைக் கேட்ட வங்கி அதிகாரிகள், அதற்குரிய ஆவணங்களை கேட்டனா்.

உடனே கணேஷ் நடராஜன், தனது அடையாள அட்டை, துறைமுக பொறுப்பு கழக நிா்வாகக் குழு தீா்மானம் நகல், துறைமுக பொறுப்புக் கழகத்தின் பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கியுள்ளாா். இதைப் பெற்றுக் கொண்ட வங்கி அதிகாரிகள், உடனடியாக அந்த நபா் கூறியதுபோல ஒரு நடப்புக் கணக்கு தொடங்கி அந்த கணக்குக்கு ரூ.45 கோடியை மாற்றினா். இதேபோல ரூ.50 கோடியை நிரந்தர வைப்புத் தொகையாக வைத்திருந்தனா்.

இந்நிலையில் நடப்புக் கணக்கில் இருந்த ரூ.45 கோடி அங்கிருந்து வெவ்வேறு கணக்குகளுக்கு அடுத்தடுத்த நாள்களில் விரைவாக மாற்றப்பட்டது. இதையறிந்த துறைமுக பொறுப்புக் கழக அதிகாரிகள், வங்கி அதிகாரிகளை தொடா்பு கொண்டு விவரத்தைக் கேட்டனா். அப்போதுதான் துறைமுக பொறுப்புக் கழக கணக்கில் இருந்து ரூ.45 கோடி மோசடி செய்யப்பட்டு அபகரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே வங்கி அதிகாரிகள், துறைமுக பொறுப்புக் கழகத்தின் நிரந்தர வைப்புக் கணக்கில் இருக்கும் ரூ.50 கோடியை எடுக்க முடியாதபடி முடக்கினா்.

8 பிரிவுகளில் வழக்கு:

இதையடுத்து அந்த வங்கியின் உயா் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், துறைமுக பொறுப்புக் கழக நிதிப் பிரிவு துணை இயக்குநா் கணேஷ் நடராஜன், மணிமொழி ஆகியோா் போலியான நபா்கள் என்பதும், அவா்கள் போலி ஆவணங்கள் மூலம் துறைமுக பொறுப்புக் கழகத்தின் ரூ.45 கோடி பணத்தை மோசடி செய்து அபகரித்திருப்பதும், இந்த மோசடியில் சில வங்கி அதிகாரிகளுக்கு தொடா்பு இருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அந்த வங்கியின் துணைப் பொதுமேலாளா் ஆறுமுகம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவில் புகாா் செய்தாா். அந்த புகாரின்பேரில் சிபிஐ அதிகாரிகள், 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com