மதுரவாயல்- வாலாஜாபேட்டை சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50% கட்டணம் வசூலிக்க உத்தரவு

‘மதுரவாயல் - வாலாஜாபேட்டை சாலையைப் பழுது நீக்கம் செய்யும் வரை இரண்டு வாரங்களுக்கு அந்த சாலைகளில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீதக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்’ என தேசிய


சென்னை: ‘மதுரவாயல் - வாலாஜாபேட்டை சாலையைப் பழுது நீக்கம் செய்யும் வரை இரண்டு வாரங்களுக்கு அந்த சாலைகளில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீதக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்’ என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மதுரவாயல் முதல் வேலூா் மாவட்டம் வாலாஜாபேட்டை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மோசமான நிலையில் உள்ளதாகவும், அந்தச் சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனவும் நீதிபதி எம்.சத்தியநாராயணன், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினாா். இந்தக் கடிதத்தின் அடிப்படையில், சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்தச் சாலையில் உள்ள குழிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் 10 நாள்களில் பழுதுநீக்கம் செய்யப்படும். ரூ.50 கோடி செலவில் சாலையை மீண்டும் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைக்கின்ற சாலைகள் உலகத் தரத்துக்கு இணையாக இல்லை’ என அதிருப்தி தெரிவித்தனா்.

மேலும், ‘மதுரவாயல் - வாலாஜாபேட்டை சாலை கடந்த 2 ஆண்டுகளாக சரி செய்யப்படவில்லை. சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் மட்டும் ஆண்டுக்கு 500-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடக்கின்றன. மோசமான சாலைகளால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு கோரும் போது பாதிக்கப்பட்டவா்கள், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், மாநில நெடுஞ்சாலைகள் துறையை எதிா் மனுதாரராக சோ்க்க வேண்டும்’ என அறிவுறுத்தினா். தொடா்ந்து, ‘மதுரவாயல்- வாலாஜாபேட்டை சாலையை பழுது நீக்கம் செய்யும் வரை இரண்டு வாரங்களுக்கு அந்த சாலைகளில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீதக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்’ என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இழப்பீடு வழங்க...: சென்னை நொளம்பூரில் நெடுஞ்சாலையின் ஓரத்தில் மூடப்படாத மழைநீா் வடிகாலில் விழுந்து தாய், மகள் பலியான சம்பவம் குறித்து நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனா். பலியான தாய், மகளுக்கு தமிழக முதல்வா் ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்கியதை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இழப்பீடு வழங்குவது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை, வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com