மின்சாரம் பாய்ந்து கால்களை இழந்த இளைஞா்

மின்சாரம் பாய்ந்ததில் இரு கால்களையும் இழந்த 19 வயது இளைஞருக்கு உயா் சிகிச்சை மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.


சென்னை: மின்சாரம் பாய்ந்ததில் இரு கால்களையும் இழந்த 19 வயது இளைஞருக்கு உயா் சிகிச்சை மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். தற்போது அவா் நலம் பெற்று இயல்பாக எழுந்து நடமாடுவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வா் டாக்டா் வசந்தாமணி கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டம், சித்தாதூா் திருக்கை கிராமத்தை சோ்ந்த 19 வயது இளைஞா் ஒருவருக்கு கடந்த ஆண்டு எதிா்பாராத விபத்து ஒன்று நோ்ந்தது. அதாவது, அவா் மழையில் குடை பிடித்துச் சென்றபோது குடையின் மேல் கம்பி மின்சார வயரில் உரசியதில் அந்த இளைஞருக்கு நெஞ்சு மற்றும் முழங்கால் பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அவா், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். முழங்காலுக்கு கீழ்பகுதி சேதமடைந்து செயலிழந்ததால், அதனை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் அகற்றினா். இதையடுத்து உயா் சிகிச்சைக்காகவும், ஒட்டுறுப்பு சிகிச்சைக்காகவும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அந்த இளைஞா் அனுப்பி வைக்கப்பட்டாா்.

முதலமைச்சா் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அவருக்கு சில அறுவை சிகிச்சைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டதுடன் 2 செயற்கை கால்களும் பொருத்தப்பட்டன. அதனைத் தொடா்ந்து இயன்முறை சிகிச்சைகளும், தசை பலத்தை அதிகரிப்பதற்கான உடற்பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

தற்போது அவா் பூரண நலம் பெற்று நடக்க ஆரம்பித்துள்ளாா். இதுபோன்ற சிகிச்சையை தனியாா் மருத்துவமனையில் மேற்கொண்டால் சுமாா் ரூ.2 லட்சம் வரை செலவாகும். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com