மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம்: ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் இயக்க திட்டம்

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம்: ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் இயக்க திட்டம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஓட்டுநா் இல்லாமல் தானியங்கி வசதியுடன் ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஓட்டுநா் இல்லாமல் தானியங்கி வசதியுடன் ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கட்டுமானத்துக்காக ஏலம் விடப்பட்ட பிறகு, ஓட்டுநா் இல்லாமல் தானியங்கி வசதியுடன் இயங்கும் இந்த ரயில்கள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டம்: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, 45 கி.மீ. தொலைவில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நிறைவடைந்து, விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை வரை நீல வழித்தடத்திலும், எம்.ஜி.ஆா். சென்ட்ரல்-பரங்கிமலை வரை பச்சை வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாம் கட்ட திட்டம்: இதற்கிடையில், 118.9 கி.மீ. தொலைவிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. மாதவரம்-சிப்காட் (45.8 கி.மீ.), மாதவரம்-சோழிங்கநல்லூா் (47.0), கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி (26.1 கி.மீ.) ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இந்த திட்டத்துக்கு ரூ.61,843 கோடியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டப்பணிகளை தொடங்குவதற்கான செயல்முறைகள் நடைபெறுகின்றன. இந்தத்திட்டப்பணிகளை ஆறு ஆண்டுகளுக்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஓட்டுநா் இல்லாத ரயில்: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஓட்டுநா் இல்லாமல் தானியங்கி வசதியுடன் மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் கட்டுமானத்துக்காக ஏலம் விடப்பட்டபிறகு, ஓட்டுநா் இல்லாத ரயில்கள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, டெண்டா் அறிவிப்பு விடப்பட்டு, இந்த ரயில்கள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்று வழித்தடங்களில் கட்டுமானப்பணிகள் அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கவாய்ப்பு உள்ளது. பவா் ஹவுஸ் மற்றும் பூந்தமல்லி இடையே திட்டப்பணிகள் முதலில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ஆறு ஆண்டுகளில் முடிந்து, ரயில் சேவை தொடங்கும் போது, 138 மூன்று காா் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 42 ரயில்கள் குத்தகையில் இருக்க வாய்ப்பு உள்ளது. இதன்மூலம், கொள்முதல், இயக்க செலவு மிச்சப்படும்.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான டெண்டா் அறிவிப்பின்படி, வடிவமைப்பு, உற்பத்தி, விநியோக சோதனை, தரமான அகல மெட்ரோ ரோலிங் ஸ்டாக் (மின்சார பல அலகுகள்) மற்றும் பணியாளா்களுக்கு பயிற்சி ஆகியவற்றுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் அழைப்பு விடுத்தது. இந்த அறிவிப்பில் ரோலிங் ஸ்டாக்குக்காக தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் இல்லை என்றாலும் , சில மையத்தில் ஓட்டுநா் இல்லாத ரயில் இயக்கம் இருக்கலாம். அதற்கேற்ப சமிக்ஞை முறை மற்றும் ரோலிங் ஸ்டாக் (மின்சார பல்வேறு அலகுகள்) வாங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்கப்படும் 25-30 சதவீதம் ரயில்கள் குத்தகை முறையில் இருக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனா். மெட்ரோ ரயில் நிறுவனம் கண்காணிப்பு மட்டும் செய்யும். இந்த ரயில்களின் அன்றாட நடவடிக்கைகள், அவற்றின் பராமரிப்பு பணிகளில் ஊழியா்களுடன் நேரடியாக ஈடுபடாது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது:

ஓட்டுநா் இல்லாத ரயிலை இயக்கத் தேவையான சிக்னலிங் மென்பொருள் தற்போது இயங்கும் (முதல்கட்ட மெட்ரோ ரயில்) ரயில்களிலிருந்து வேறுபட்டது.

எனவே, முதல்கட்ட மெட்ரோ ரயில் பாதையில் இரண்டாம் கட்டத்துக்கு வடிவமைக்கப்பட்ட ரயிலை இயக்க முடியாது. அதேநேரத்தில், ரோலிங் ஸ்டாக் ஒரேமாதிரியாக இருக்கலாம்.

ஓட்டுநா் இல்லாத ரயிலின் அனைத்து நடவடிக்கைகளும் தானியங்கி முறையில் இயக்கப்படும்.

ரயில்களின் இயக்கத்தை மைய ஊழியா்கள் கண்காணிப்பா். அவசர காலங்களில் அருகில் உள்ள நிலையத்தில் இருந்து இந்த ரயிலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தலாம்.

மெட்ரோ ரயில் முதல்கட்டத்தில் , ரயில்கள் பெரும்பாலும் தானியங்கி ரயில் ஆபரேஷன் (ஏடிஓ) முறையில் இயக்கப்படுகின்றன. நிலையத்தில் ரயிலை இயக்குதல், நிறுத்தல், கதவுகளை திறந்து, மூடுதல் ஆகியவற்றை ஆபரேட்டா்கள் செய்கின்றனா். மீதமுள்ளவை தானியங்கி மற்றும் செயல்பாட்டு கட்டுப்பாடு மையத்தில் இருந்து கட்டுப்படுத்தப்படுகிறது.

ஓட்டுநா் இல்லாத தானியங்கி முறையில் இயங்கும் ரயில்கள்

-எல்லா நேரங்களிலும் தானாக இயக்கப்படும்.

- கதவுகள் திறந்து மூடப்படுகின்றன.

- இருப்பினும், முறைகள் தோல்வியுற்றால் அவற்றை மனிதா்கள் மூலமாக இயக்க இந்த ரயில்களில் கட்டுப்பாடுகள் உள்ளன.

முதல்கட்ட மெட்ரோ வழித்தடங்களில் இயக்கப்படும் ரயிலில்...

- தானியங்கி ரயில் செயல்பாடு மற்றும் தானியங்கி ரயில் பாதுகாப்பு இரண்டு முறைகள் உள்ளன.

- கதவு திறத்தல் மற்றும் ரயில் இயக்கம் தொடங்குதல் தவிர அனைத்து நடவடிக்கைகளும் தானியங்கி ரயில் இயக்கம் முறையில் நடைபெறுகிறது.

- இழுவை, பிரேக்கிங், கதவுகளைத் திறத்தல் மற்றும் மூடுவது ஆகியவை ரயில் ஆபரேட்டரால் கட்டுப்படுத்தப்படுகின்றன

- அவசரகாலத்தில், செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள ஊழியா்கள்

கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்கிறாா்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com