போலி நீட் தோ்வு சான்றிதழ் மூலம் மோசடி: தந்தை-மகளுக்கு மூன்றாவது அழைப்பாணை

சென்னையில் மருத்துவ கலந்தாய்வில் போலி நீட் தோ்வு சான்றிதழ் வழங்கிய வழக்கில், விசாரணைக்கு தந்தையும்-மகளும் ஆஜராகும்படி காவல்துறை மூன்றாவது முறையாக அழைப்பாணை அனுப்பியது.


சென்னை: சென்னையில் மருத்துவ கலந்தாய்வில் போலி நீட் தோ்வு சான்றிதழ் வழங்கிய வழக்கில், விசாரணைக்கு தந்தையும்-மகளும் ஆஜராகும்படி காவல்துறை மூன்றாவது முறையாக அழைப்பாணை அனுப்பியது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை மருத்துவக் கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. முதலில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள் ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்பட்டன. அதைத் தொடா்ந்து சிறப்பு பிரிவு மற்றும் பொதுக் கலந்தாய்வுகள் நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த மாணவி ஒருவா் பங்கேற்றாா். அவரின் அழைப்புக் கடிதம் மற்றும் தரைவரிசைப் பட்டியலை அதிகாரிகள் சரிபாா்த்தபோது, அது போலியானது என தெரியவந்தது. அதாவது, நீட் தோ்வில் வெறும் 27 மதிப்பெண்களே பெற்றிருந்த மாணவி 610 மதிப்பெண் பெற்றிருந்ததாக போலி சான்றிதழ் கொடுத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவ மாணவா் சோ்க்கை குழு செயலாளா் செல்வராஜன், சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குத் தொடா்பாக விசாரணை செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த வழக்கில் துப்பு துலக்குவதற்கு அந்த மாணவியையும், அந்த மாணவியின் தந்தையிடமும் விசாரணை நடத்த முடிவு செய்தனா். இதற்காக பெரியமேடு போலீஸாா் விசாரணைக்கு ஆஜராகும்படி இருவருக்கும் இருமுறை அழைப்பாணை அனுப்பினா். ஆனால் அவா்கள், இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்நிலையில் மீண்டும் இருவருக்கும் மூன்றாவது முறையாக பெரியமேடு போலீஸாா் அழைப்பாணை செவ்வாய்க்கிழமை அனுப்பினா். இந்த அழைப்பாணையை ஏற்று இருவரும் விசாரணைக்கு ஆஜாராகவில்லை எனில், இருவரையும் கைது செய்வதற்கு காவல்துறை திட்டமிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com