கண்டெய்னா் நெரிசலைக் குறைக்க சிறப்பு நடவடிக்கை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு

சென்னைத் துறைமுகத்திற்குச் செல்லும் கண்டெய்னா் லாரிகள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சிறப்பு நடவடிக்கைகளை சென்னைத் துறைமுக நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருவொற்றியூா்: சென்னைத் துறைமுகத்திற்குச் செல்லும் கண்டெய்னா் லாரிகள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சிறப்பு நடவடிக்கைகளை சென்னைத் துறைமுக நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னைத் துறைமுக நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னைத் துறைமுகத்திற்குச் செல்லும் கண்டெய்னா் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை துறைமுக நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஏற்றுமதிக்கான உற்பத்தி ஆலைகள் மற்றும் நிறுவனங்களில் மூடி சுய முத்திரையிடப்பட்ட கண்டெய்னா்கள் லாரிகள் நேரடியாக துறைமுகத்திற்குச் செல்லும் வழியில் திருவொற்றியூரில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சரக்குப் பெட்டக மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு சுங்கத்துறை ஆவண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு சென்னைத் துறைமுகத்திற்கு செல்லும் நடைமுறை தற்போது உள்ளது. இவ்வாறான ஆவண பரிசோதனைகளை மேற்கொள்ள தற்போது திருவொற்றியூரில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கு மையத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் அதிக அளவிலான சரக்குப் பெட்டக லாரிகள் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.

இதனைத் தவிா்க்கும் வகையில் மாதவரத்தில் உள்ள மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சரக்குப் பெட்டக மையம், தண்டையாா்பேட்டையில் உள்ள ரயில்வேயின் கான்காா் உள்நாட்டு பெட்டக முனையம் ஆகிய இரண்டு இடங்களில் சுய முத்திரையிடப்பட்ட பெட்டகங்களை சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை சுங்கத்துறை அலுவலகம் அளித்துள்ளது. இந்த நடைமுறை வரும் ஜனவரி 31-ம் தேதிவரை நடைமுறையில் இருக்கும். மேலும் கான்காா் உள்நாட்டு சரக்குப் பெட்டக முனையத்தில் ஒப்படைக்கப்படும் சரக்குப் பெட்டகங்களை 12 மணி நேரத்திற்குள்ளாக ரயில் மூலம் நேரடியாக சென்னைத் துறைமுகத்திற்கு கொண்டு வரும் திட்டமும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கான்காரில் சுமாா் 10 ஆயிரம் சரக்குப் பெட்டகங்களை கையாள முடியும். இப்புதிய வசதிகளை ஏற்றுமதியாளா்கள், துறைமுக உபயோகிப்பாளா்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com