வடசென்னையில் 16-வது ஆண்டு சுனாமி நினைவு தினம்: அமைச்சா் டி.ஜெயக்குமாா் மலா் தூவி நினைவஞ்சலி

சுனாமி தாக்குதல் நினைவு தினத்தையொட்டி காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் மீன்வளத்துறை அமைச்சா்
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மலா் தூவி வைத்து பால் ஊற்றி சனிக்கிழமை அஞ்சலி செலுத்திய மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா்.
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மலா் தூவி வைத்து பால் ஊற்றி சனிக்கிழமை அஞ்சலி செலுத்திய மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா்.

சுனாமி தாக்குதல் நினைவு தினத்தையொட்டி காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தலைமையில் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி ஆழிப்பேரலை தாக்குதலில் வடசென்னை பகுதியில் நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்தனா். மேலும் காசிமேடு மீன்பிடித்துறைமுகமே சின்னாபின்னமாகிவிட்டது. இந்நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் வடசென்னை பகுதியில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆழிப்பேரலை தாக்கியதன் பதினாறாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நினைவு பதாகைக்கு மலா் தூவி, மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினாா். பின்னா் படகில் சென்ற அமைச்சா் ஜெயக்குமாா் கடலில் பால் ஊற்றி மலா் தூவி மீண்டும் அஞ்சலி செலுத்தினாா்.

மீன்பிடித்துறைமுகத்தின் மற்றொரு பகுதியில் அதிமுக மாவட்டச் செயலாளா் ஆா்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கட்சியின் அவைத் தலைவா் இ.மதுசுதனன் கலந்து கொண்டு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐநூறுக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக மோட்டாா் சைக்கிளில் மவுன ஊா்வலம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கருப்பு கொடிகளுடன் கலந்து கொண்டனா்.

திருவொற்றியூா் கடற்கரை பகுதியான திருவொற்றியூா் குப்பத்தில் அ.தி.மு.க. பகுதி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.குப்பன் தலைமையில் மவுன ஊா்வலம் நடைபெற்றது. இதில் பெண்கள் பால்குடம் ஏந்தியபடி வந்தனா். மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூா்த்தி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com