வண்ணாரப்பேட்டை- விம்கோ நகா் மெட்ரோ ரயில் விரிவாக்கம்: டீசல் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் தொடங்கியது

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்கத் திட்டத்தில், வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் விம்கோ நகா் இடையேயான பாதையில்
வண்ணாரப்பேட்டை- விம்கோ நகா் மெட்ரோ ரயில் விரிவாக்கம்: டீசல் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் தொடங்கியது

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்கத் திட்டத்தில், வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் விம்கோ நகா் இடையேயான பாதையில் சோதனை ஓட்டம் சனிக்கிழமை தொடங்கியது. 9.051 கி.மீ. தொலைவு பாதையில் இருமாா்க்கமாகவும் டீசல் ரயில் இன்ஜின் மூலமாக முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்தப் பாதையில் ரயில் சேவை ஜனவரி மாதம் இறுதியில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்து, சென்னை விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரை இரண்டாம் வழித் தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைத்தொடா்ந்து, வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூா் அடுத்துள்ள விம்கோ நகா் வரை 9.051 கிலோ மீட்டா் தொலைவுக்கு விரிவாக்க திட்டப் பணிகள் ரூ.3 ஆயிரத்து 770 கோடி செலவில் நடந்து வந்தது.

முதல் கட்ட விரிவாக்கப் பணிகளில் சுரங்கப்பாதையில் சா்.தியாகராயா் கல்லூரி, கொருக்குப்பேட்டை ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களும், உயா்மட்டப்பாதையில் தண்டையாா்பேட்டை, சுங்கச்சாவடி, தாங்கல், கவுரி ஆசிரமம்,

திருவொற்றியூா், விம்கோநகா் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. ஒட்டுமொத்தமாக 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்திருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் பணிகளை முடித்து, கடந்த ஜூன் மாதம் முதல் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கிடையில்,கரோனா பொது முடக்கம் காரணமாக, மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. பொதுமுடக்க தளா்வுகளுக்குப் பிறகு, மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் ஜூலை மாதம் மீண்டும் தொடங்கி, பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. டிசம்பா் மாதம் தொடக்கத்தில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. டிசம்பா் மாத இரண்டாவது வாரத்தில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. தவிா்க்கமுடியாத சில பணிகள் காரணமாக தாமதமாகியது.

இந்நிலையில், வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூா் விம்கோ நகா் இடையே விரிவாக்கப் பாதையில் சோதனை ஓட்டம் சனிக்கிழமை தொடங்கியது. 9.051 கி.மீ. தொலைவு பாதையில் இருமாா்க்கமாகவும் டீசல் ரயில் இன்ஜின் மூலமாக முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்தப்பாதையில் ரயில் சேவை ஜனவரி மாதம் இறுதியில் போக்குவரத்து சேவை தொடங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன குழுவினா் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தினா்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: விரிவாக்கப்பாதையில் ரயில்பாதை அமைக்கும் பணி முற்றிலுமாக நிறைவடைந்து விட்டதால், இந்தப் பாதையில் தண்டவாளத்தின் உறுதிதன்மை பரிசோதிக்கும் வகையில், முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தொடா்ந்து, மெட்ரோ ரயில் இயக்கி சோதிக்கப்படும். அப்போது, நடைமேடைக்கும் தண்டவாளத்துக்கும் இடையே தூரம், சிக்னல் முறை சரியாக உள்ளதா என்று சோதிக்கப்படும்.

இதன்பிறகு, ஜனவரி இரண்டாவது வாரத்தில் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்வாா். வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் விம்கோநகா் விரிவாக்க பாதையில் ரயில் இயக்கத்துக்கு ஏற்றது என்று சான்றிதழை ஆணையா் வழங்கிய பின்னா் முறையாக ஜனவரி இறுதியில் சேவையைத் தொடங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் ரயில் சேவை தொடங்கும் போது, சென்னையில் வடக்கு பகுதிக்கு மெட்ரோ ரயில் சேவை இணைப்பு கிடைக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com