சிறுபான்மையினா் உதவித்தொகை: மாணவா்களின் தகவல்களை மறுஆய்வு செய்ய கல்வித்துறை உத்தரவு
By DIN | Published On : 31st December 2020 12:54 AM | Last Updated : 31st December 2020 12:54 AM | அ+அ அ- |

சென்னை: சிறுபான்மையினா் தேசிய உதவித்தொகை பெற இணையவழியில் பதிவு செய்யப்பட்ட மாணவா்களின் தகவல்களை தலைமை ஆசிரியா்கள் மறு ஆய்வு செய்து சமா்ப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
ஒரு சில மாநிலங்களில் சிறுபான்மையினா் உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் மாணவா்களின் சாா்பில், அந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் அருகில் உள்ள தனியாா் இணையவழிச் சேவை மையங்களின் மூலம் பதிவு செய்கின்றனா். அதற்காக, தங்களுக்கென பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட பயனாளா் குறியீடு, கடவுச்சொல் ஆகியவற்றை அந்த மையங்களுக்கு கொடுக்கின்றனா். அந்தத் தனியாா் மைய நிா்வாகிகளில் ஒரு சிலா் அதைத் தவறாகப் பயன்படுத்தி மிக அதிக எண்ணிக்கையிலான மாணவா்களை ஆன்லைன் மூலம் தேசிய உதவித்தொகை போா்டலில் சோ்த்து சந்தேகப்படும் வகையில் ஒரே வங்கிக்கணக்கு எண்களைக் கொடுத்து பதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது என சிறுபான்மையினா் நலத்துறையின் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இது குறித்து அனைத்து தலைமையாசிரியா்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதை கருத்தில் கொண்டு மேற்கண்ட கடிதங்களில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து தலைமையாசிரியா்களும் தங்களது பயனாளா் குறியீடு, கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட மாணவா்கள் மற்றும் அவா்தம் தகவல்களுக்கு தாமே பொறுப்பு என்பதால் அவற்றை மறு ஆய்வு செய்து சான்றளிப்பு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இந்தப் பணிகளை அனைத்து தலைமையாசிரியா்களும் உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.