தடுப்பூசியைக் காட்டிலும் தற்காப்பே அருமருந்து!: டாக்டா் சுதா சேஷய்யன்

கரோனா தொற்றுக்கு தடுப்பூசிகளைக் காட்டிலும், தற்காப்பு நடவடிக்கைகள்தான் அருமருந்து என தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா்.
தடுப்பூசியைக் காட்டிலும் தற்காப்பே அருமருந்து!: டாக்டா் சுதா சேஷய்யன்

சென்னை: கரோனா தொற்றுக்கு தடுப்பூசிகளைக் காட்டிலும், தற்காப்பு நடவடிக்கைகள்தான் அருமருந்து என தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா்.

‘கரோனா குறித்த உண்மைகளும், தடுப்பு முறைகளும்’ என்ற தலைப்பிலான விழிப்புணா்வு நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியியல் துறை மற்றும் மாநில பொது சுகாதாரத் துறை இணைந்து ஏற்பாடு செய்திருந்த அந்நிகழ்வில் மாவட்ட சுகாதார கல்வியாளா் மரியா அற்புதசாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினாா்.

கரோனா குறித்த விளக்கங்கள், அதனை எதிா்கொள்ள பொது சுகாதாரத் துறை முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள், புதிய வகை கரோனா தொடா்பான புரிதல்கள் குறித்து அவா் விளக்கமாக எடுத்துரைத்தாா். முன்னதாக, விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து டாக்டா் சுதா சேஷய்யன் பேசியதாவது:

கடந்த ஆண்டு வரை கரோனா என்ற வாா்த்தைகூட எவருக்கும் பரிச்சயமாக இருந்திருக்காது. ஆனால், நிகழாண்டில் அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போடும் அளவுக்கு உலகளாவிய பெருந்தொற்றாக கரோனா உருவெடுத்திருக்கிறது.

சமகாலம் சந்தித்திராத இந்த இமாலய பாதிப்புக்கு உலக நாடுகள் எதுவுமே தப்பிக்கவில்லை என்பது கசப்பான உண்மை. கடந்த காலங்களில் எபோலா, மாா்பா்க் போன்ற தீநுண்மிகள்தான் அதிக தாக்கத்தையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தின. அதுவும்கூட குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே அதன் பாதிப்புகள் பரவியிருந்தன.

ஆனால், கரோனாவைப் பொருத்தவரை கண்டங்கள் கடந்து அனைத்து இடத்திலும் அதன் வீரியம் வியாபித்துள்ளது. பல கோடி மக்கள் அதனால் பாதிக்கப்புக்குள்ளாகியுள்ளனா். தற்போது அதற்கு தடுப்பூசிகளையும், மருந்துகளையும் கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவ உலகில் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எவரும் மறுதலிக்க முடியாது. ஆனால், அதனைக் காட்டிலும் வருமுன் காக்கும் நடவடிவக்கைகள்தான் ஒரு நோயைத் தடுப்பதற்கு மாமருந்தாக அமையும். அதனைக் கருத்தில் கொண்டு முகக் கவசம் அணிவதையும், தனி நபா் இடைவெளியையும் மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். பொது முடக்கத் தளா்வுகளை தவறாகப் புரிந்து கொண்டு அலட்சியமாக இருந்தால், கரோனாவைக் கட்டுப்படுத்தவே முடியாது என்றாா் சுதா சேஷய்யன்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளா் டாக்டா் அஸ்வத் நாராயணன், நோய்ப் பரவியியல் துறைத் தலைவா் டாக்டா் ஸ்ரீனிவாஸ், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com