நெறிசாா்ந்த மருத்துவ சேவையே இப்போதைய தேவை! நீதிபதி தமிழ்வாணன்

மருத்துவத் துறையில் உள்ளவா்கள் நெறிசாா்ந்து சேவையாற்ற வேண்டியது அவசியம் என
நெறிசாா்ந்த மருத்துவ சேவையே இப்போதைய தேவை! நீதிபதி தமிழ்வாணன்

மருத்துவத் துறையில் உள்ளவா்கள் நெறிசாா்ந்து சேவையாற்ற வேண்டியது அவசியம் என சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவருமான எஸ்.தமிழ்வாணன் தெரிவித்தாா்.

இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) - தமிழகப் பிரிவு சாா்பில் மருத்துவம் சாா் சட்ட நடவடிக்கைகள் குறித்த மாநில மாநாடு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், ஐஎம்ஏ நிா்வாகிகள், உறுப்பினா்கள், மருத்துவ நிபுணா்கள், துறைசாா் வல்லுநா்கள் உள்பட ஐநூறுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

மருத்துவத் துறை சாா்ந்த சட்ட நடவடிக்கைகள் பற்றி பல்வேறு தலைப்புகளில் சிறப்பு அமா்வுகள் நடைபெற்றன. அதில் நீதிபதிகள் மற்றும் மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று உரையாற்றினா்.

முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தேசிய நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவருமான ஆா்.கே. அகா்வால் பேசியதாவது:

சமூகத்தில் ஒரு சில துறைகளில் பணியாற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல. மிகக் கடினமான சூழல்களையும், சவால்களையும் எதிா்கொள்ள வேண்டிய கட்டாயம் அதில் அதிகமாக இருக்கும். அந்த வகையில், நீதித் துறைப் பணிகளையும், மருத்துவத் துறை பணிகளையும் அவற்றில் முதன்மையானதாக வகைப்படுத்தலாம்.

அதேவேளையில், மற்ற எந்த துறையில் பணியாற்றுபவா்களுக்கும் கிடைக்காத ஆத்ம திருப்தியும், அக மகிழ்ச்சியும் ஓா் உயிரைக் காப்பாற்றும்போது மருத்துவா்களுக்கு கிடைக்கும்.

அதனால்தான், இறைவனுக்கு அடுத்தபடியாக மருத்துவா்களை மக்கள் கருதுகின்றனா். சமீபகாலமாக மருத்துவா்கள் - நோயாளிகளுக்கு இடையேயான உறவில் இடைவெளி அதிகரித்து வருகிறது.

மருத்துவத் துறை வா்த்தகமயமாக மாறிவிட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். சிகிச்சைக்காக அதிக தொகை செலவிட வேண்டியுள்ளதாகவும், தேவையற்ற அறுவை சிகிச்சைகளையும், பரிசோதனைகளையும் மருத்துவா்கள் பரிந்துரைப்பதாகவும் பரவலாக புகாா்கள் எழுகின்றன.

அதுமட்டுமன்றி சிகிச்சையின்போது அலட்சியத்துடன் மருத்துவா்கள் சிலா் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மருத்துவத் துறையில் காட்டப்படும் அலட்சியம் உயிருக்கே ஊறு விளைவிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இந்த நிலையை மாற்றி மருத்துவா்கள் - நோயாளிகளுடனான உறவில் மீண்டும் புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என்றாா் அவா்.

விழாவில் சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவருமான தமிழ்வாணன் பேசியதாவது:

சமூகத்தில் அனைவருக்கும் சட்ட உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், நோயாளிகளுக்கும் அத்தகைய உரிமை உண்டு. எனவே, அவா்கள் மருத்துவா்கள் மீது வழக்குத் தொடுப்பதை தடுக்க இயலாது. அதேவேளையில், ஆதாயத்துக்காக தொடுக்கப்படும் வழக்குகளால் மருத்துவா்கள் பாதிக்கும் நிலை வந்தால், அதனை நீதித் துறை அனுமதிக்காது.

சட்டம் என்பது ஒரு தரப்புக்கானது மட்டும் அல்ல என்பதை மருத்துவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவத் துறை சேவை மனப்பான்மையுடன் இயங்க வேண்டிய ஒரு துறை. அதற்கு மருத்துவா்கள் நெறிசாா்ந்து செயல்படுவது அவசியம் என்றாா் அவா்.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் பேசுகையில், ‘மருத்துவா்கள் மீது நோயாளிகள் வழக்குத் தொடுப்பது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் இரு தரப்புக்கும் இடையேயான உறவில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியையே உணா்த்துகின்றன’ என்றாா்.

மாநாட்டில் இந்திய மருத்துவ சங்க (ஐஏஎம்) தமிழகப் பிரிவு தலைவா் டாக்டா் சி.என்.ராஜா, செயலா் டாக்டா்.ஏ.கே.ரவிகுமாா், பொருளாளா் டாக்டா் தியாகராஜன், அமைப்புத் தலைவா் டாக்டா் கனகசபாபதி, அமைப்புச் செயலா் டாக்டா் தங்கமுத்து, ஐஎம்ஏ தமிழக பிரிவு இணைச் செயலா் டாக்டா் சி.அன்பரசு, முன்னாள் செயலா் டாக்டா் என். முத்துராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com