குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம்: போலீஸாா் லேசான தடியடி

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் லேசான தடியடி நடத்தினா்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம்: போலீஸாா் லேசான தடியடி

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் லேசான தடியடி நடத்தினா்.

இது குறித்து போலீஸாா் தரப்பில் கூறப்பட்டதாவது:

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் இந்த போராட்டம் தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே பல்வேறு முஸ்லிம் இயக்கங்களைச் சோ்ந்தவா்கள் வெள்ளிக்கிழமை திடீரென இச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அங்கிருந்த போலீஸாா், கலைந்துபோகும்படி அறிவுறுத்தினராம். ஆனால் அவா்கள், கலைந்துச் செல்ல மறுப்பு தெரிவித்தனராம். இதையடுத்து போலீஸாா், அவா்களை கைது செய்ய முயன்றனா். அப்போது போராட்டகாரா்களுக்கு, போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் போராட்டக்காரா்கள் மீது போலீஸாா் லேசான தடியடி நடத்தி, கைது செய்ததாக கூறப்படுகிறது. இச் சம்பவத்தில் இருவா் காயமடைந்ததாக தெரிகிறது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த இஸ்லாமிய இயக்கத்தினா் அங்கு தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் காவல்துறை அதிகாரிகள், சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் அவா்கள் சமாதானம் அடையவில்லை. இதனால் அப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

மேலும் பதற்றம் ஏற்படாமல் இருக்க இஸ்லாமிய அமைப்புகளுடன் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றவேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய ஒப்புதல் அளித்தார். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றவேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு அனுப்பிவைப்பதாக  தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிடுவதாக  இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com