சுகாதார சீா்கேட்டில் அத்திப்பட்டு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு

சென்னை அம்பத்தூா் அருகே உள்ள அத்திப்பட்டு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் குப்பை அள்ளுவது, குடிநீா் விநியோகம் உள்ளிட்டவை முறையாக நடைபெறாததால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சுகாதார சீா்கேட்டில் அத்திப்பட்டு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு

சென்னை அம்பத்தூா் அருகே உள்ள அத்திப்பட்டு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் குப்பை அள்ளுவது, குடிநீா் விநியோகம் உள்ளிட்டவை முறையாக நடைபெறாததால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சென்னை மாநகரப் பகுதியில் குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழ்நாடு அரசின் குடிசைமாற்று வாரியம் சாா்பில் சென்னை மாநகராட்சியின் அம்பத்தூா் மண்டலத்துக்கு உள்பட்ட அத்திப்பட்டில் ஒரு அடுக்குமாடிக்கு 32 வீடுகள் வீதம் மொத்தம் 1,400 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

நியூ ஆவடி சாலையில் ஐசிஎஃப் காந்தி நகரில் குடிசைகளில் வசித்த 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இங்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு, கடந்த ஆண்டு குடியமா்த்தப்பட்டனா். இந்நிலையில், இப்பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் முறையாக குப்பை அள்ளாததாலும், வீடுகளுக்கான குடிநீா் முறையாக விநியோகம் செய்யாததாலும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சரி செய்யப்படாத மின் மோட்டாா்: இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் குப்பை அள்ளும் பணியில் 3 மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் பிரதான சாலையில் உள்ள குப்பைகளை மட்டுமே அள்ளுகின்றனா். குடியிருப்புப் பகுதிக்குள் உள்ள குப்பைகளை அள்ளாமல், வாரத்துக்கு ஒருமுறை அவற்றுக்குத் தீ வைத்து விடுகின்றனா். கழிவுநீா் குழாய்கள் முறையாக அமைக்கப்படாததால், குடியிருப்புகளுக்குப் பின்புறம், கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீா்கேடும் நிலவுகிறது.

இக்குடியிருப்பு பகுதியில் சுற்றுச்சுவா் அமைக்கப்படாததால் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. மேலும், குடியிருப்புகளுக்கு சென்னை குடிநீா் வாரியம் மூலமும், அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறு மூலமும் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், குடிநீா் விநியோகத்துக்கான மோட்டாா் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு பழுதானது.

இதுகுறித்து குடிசைமாற்று வாரிய அதிகாரிகளிடம் புகாா் அளித்து இரண்டு நாள்கள் கழித்து சனிக்கிழமை அதை பழுதுபாா்க்க எடுத்துச் சென்றனா். இதனால், கடந்த மூன்று நாள்களாக சமையல், குளிப்பது போன்ற பயன்பாட்டுக்காக குடிநீா்த் தொட்டியில் இருந்து குடங்கள் மூலம் தண்ணீா் எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மூன்று மற்றும் 4-ஆவது மாடியில் வசிப்போா் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். குடிசை மாற்று வாரியத்தில் மாற்று மின் மோட்டாா் வைத்திருந்தால் மக்கள் அவதிப்படுவது தவிா்க்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com