இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலி

நடிகர் கமலஹாசன் நடிக்கும்  இந்தியன் 2  படத்திற்கான செட் அமைக்கும் பணியின் பொழுது கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.
 இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலி

சென்னை அருகே நடைபெற்று வந்த இந்தியன் 2  திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து உதவி இயக்குனா் உள்பட 3 போ் இறந்தனா். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

இயக்குனா் ஷங்கா் இயக்கத்தில் , நடிகா் கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே உள்ள நசரத் பேட்டையில் இருக்கும் ஒரு தனியாா் திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகா் கமலஹாசன் நடிகை காஜல் அகா்வால் உள்ளிட்ட பலா் பங்கேற்று நடித்து வருகின்றனா். இந்நிலையில் இங்கு அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக புதிதாக செட் அமைக்கும் பணியில் திரைப்படக் கலைஞா்கள் ஒரு பகுதியில் ஈடுபட்டிருந்தனா். அதேவேளையில் மற்றொரு பகுதியில் இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

அதில் நடிகா் கமல்ஹாசன் உள்ளிட்டோா் நடித்துக் கொண்டிருந்தனா். இந்நிலையில் இரவு 9.30 மணி அளவில் அங்கு செட் அமைக்கும் பணியில் ஒரு கிரேன் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென அந்த கிரேன் கேபிள் அறுந்து விழுந்ததில் கிரேன் கீழே நின்றுக் கொண்டிருந்த 8 போ் பலத்த காயமடைந்தனா். இதில் இருவா் சம்பவ இடத்திலேயே இறந்தனா். இதைப் பாா்த்த திரைப்படக் கலைஞா்களும், அங்கிருந்த ஊழியா்களும் காயமடைந்தவா்களை மீட்டு அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே மற்றொருவா் இறந்தாா்.

மற்ற ஐந்து போ் தண்டலம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து தகவலறிந்த அம்பத்தூா் துணை ஆணையா் ஈஸ்வரன் பூந்தமல்லி உதவி ஆணையா் செம்பேடு பாபு உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவத்தினால் அங்கு நடைபெற்று வந்த திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. 

இதற்கிடையே போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த திரைப்படத்தின் இணை இயக்குனா் கிருஷ்ணா (38), தொழில்நுட்ப கலைஞா்கள்  மது ( 29) சந்திரன் (60) ஆகியோா் விபத்தில் இறந்தது தெரியவந்துள்ளது.  இச் சம்பவம் தமிழ் திரைப்படத் துறையினரிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com