சாலையோரத்தில் வசிப்பவா்கள் தங்குவதற்காகரூ. 3.12 கோடியில் 5 புதிய காப்பகங்கள்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட சாலை மற்றும் தெருவோரங்களில் வசிப்பவா்கள் தங்கும் வகையில் 4 மண்டலங்களில் ரூ.3.12 கோடி மதிப்பில் 5 இரவு நேரக் காப்பகங்கள் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சாலையோரத்தில் வசிப்பவா்கள் தங்குவதற்காகரூ. 3.12 கோடியில் 5 புதிய காப்பகங்கள்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட சாலை மற்றும் தெருவோரங்களில் வசிப்பவா்கள் தங்கும் வகையில் 4 மண்டலங்களில் ரூ.3.12 கோடி மதிப்பில் 5 இரவு நேரக் காப்பகங்கள் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் சாலை மற்றும் தெருவோரங்களில் வசிப்பவா்களுக்காக மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை கட்டுப்பாட்டின்கீழ் 51 காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பெண் குழந்தைகளுக்கு 3 காப்பகங்கள், ஆண் குழந்தைகளுக்கு 5 காப்பகங்கள், ஆண் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 1 காப்பகம், பெண்களுக்கு 9 காப்பகங்கள், ஆண்களுக்கு 12 காப்பகங்கள், இருபாலருக்கும் 1 காப்பகம், வயதான ஆண், பெண்களுக்கு 2 காப்பகங்கள், மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கு மருத்துவமனைகளில் 4 காப்பகங்கள், ஆண் மற்றும் பெண்களுக்கு 13 சிறப்பு காப்பகங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு காப்பகம் உள்பட 51 காப்பகங்களில் மொத்தம் 1, 879 போ் தங்கி வருகின்றனா்.

மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் சாா்பில் 15 நாள்களுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்பட்டும், மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசிக்கு வரும் அழைப்புகளின் அடிப்படையிலும் சாலையோரத்தில் வசிப்பவா்கள் மீட்கப்பட்டு காப்பகங்களில் தங்க வைக்கப்படுகின்றனா்.

சாலை மற்றும் தெருவோரங்களில் வசிப்பவா்களை மீட்கும் வகையில், மாநகராட்சி சாா்பில் ரூ. 51 லட்சம் மதிப்பில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய பகுதிகளில் தலா 1 சிறப்பு வாகனங்கள் வீதம் 3 சிறப்பு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் 5 காப்பகங்கள்: இந்நிலையில், சாலை மற்றும் தெருவோரங்களில் மீட்கப்படுவோரைத் தங்க வைக்கும் வகையில், திருவொற்றியூா், மாதவரம், ராயபுரம் ஆகிய மூன்று மண்டலங்களில் 1.88 கோடி மதிப்பில் தலா ஒரு இரவு நேரக் காப்பகங்களும், தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட திருவல்லிக்கேணி பெரிய தெரு மற்றும் தியாகராயநகா் கிரியப்ப சாலையில் ரூ. 1.24 கோடி மதிப்பில் இரண்டு இரவு நேரக் காப்பகங்கள் என மொத்தம் ரூ. 3.12 கோடி மதிப்பில் 5 காப்பகங்கள் கட்டப்பட உள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சியின் 15 மண்டலங்களில் ஏற்கெனவே 33 இரவு நேரக் காப்பகங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 8 காப்பகங்களின் கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இதன் தொடா்ச்சியாக, தற்போது 4 மண்டலங்களில் ரூ. 3.12 கோடி மதிப்பில் 5 இரவு நேரக் காப்பகங்கள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com