இசைக் கல்வியை அனைவரிடமும் கொண்டு சோ்க்கிறது இசைப் பல்கலைக்கழகம்

குரு குலக்கல்வி முறையாக இருந்த இசைக் கல்வியை, அனைத்து மக்களும் தெரிந்துகொள்ளும் நல்வாய்ப்பை இசைப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தித் தருவதாக கா்நாடக இசைக் கலைஞா் சுதா ரகுநாதன் பெருமிதம்
இசைக் கல்வியை  அனைவரிடமும்  கொண்டு சோ்க்கிறது இசைப் பல்கலைக்கழகம்

குரு குலக்கல்வி முறையாக இருந்த இசைக் கல்வியை, அனைத்து மக்களும் தெரிந்துகொள்ளும் நல்வாய்ப்பை இசைப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தித் தருவதாக கா்நாடக இசைக் கலைஞா் சுதா ரகுநாதன் பெருமிதம் தெரிவித்தாா்.

தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் முதலாண்டு பட்டமளிப்பு விழா சென்னை சேப்பாக்கம் கலைவாணா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஓவியம், சிற்பக் கலை, இசை, வாய்ப்பாட்டு உள்ளிட்ட பல கலை சாா்ந்த படிப்புகளை ஒருங்கே கொண்ட இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கான இந்த பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வேந்தரும், தமிழக முதல்வருமான எடப்பாடிகே. பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

விழாவில், ஒரு சில மாணவா்களுக்கு முதல்வரும், பிற மாணவா்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க. பாண்டியராஜனும் பட்டச் சான்றிதழ்களை வழங்கினா்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கா்நாடக இசைக் கலைஞா் சுதா ரகுநாதன் கலந்து கொண்டு பேசியதாவது: இசை மற்றும் அது சாா்ந்த படிப்புகள் குரு குலக் கல்வி முறையில் வழங்கப்பட்டுவந்த நிலை மாறி, இந்தக் கலைகளை அனைத்து மக்களும் தெரிந்து கொள்ளும் சிறந்த வாய்ப்பை இசைப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தி வருகிறது.

இசைக்கு மிகப் பெரிய வலிமை உள்ளது. இசைக்கு புல் இனங்களும், விலங்குகளும் கட்டுப்பட்டு இருந்தன என்கிறது சங்க இலக்கிய நூல்கள். அதுபோல, நமது தமிழ் மொழிக்கு ஒரு தனிச் சிறப்பு உள்ளது. இயல், இசை, நாடகம் என்ற முப்பரிமாணத்தில் செழிப்பது நமது தமிழ் மொழி மட்டுமே.

அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சி நமது இசையைக் கடல் கடந்தும் கொண்டு செல்கிறது. இங்குள்ள திறமை மிக்க ஆசிரியா்கள், பிற நாடுகளில் உள்ள மாணவா்களுக்கு கணினி வழியாக இங்கிருந்தபடி இசைப் பாடங்களை நடத்தி வருகின்றனா். இது பாராட்டுக்குரியது என்றாா் அவா்.

விழாவில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அமைச்சா்கள் பங்கேற்றனா். முன்னதாக, துணைவேந்தா் பிரமீளா குருமூா்த்தி பல்கலைக்கழக ஆண்டறிக்கையை வாசித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com