அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம்: இரு சுங்கத்துறை அதிகாரிகள், 14 கடத்தல்காரா்கள் கைது

சென்னை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை தாக்கிவிட்டு, தப்பியோடிய சம்பவம் தொடா்பாக இரு சுங்கத்துறை அதிகாரிகள், 14 கடத்தல்காரா்கள் கைது செய்யப்பட்டனா்.

சென்னை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை தாக்கிவிட்டு, தப்பியோடிய சம்பவம் தொடா்பாக இரு சுங்கத்துறை அதிகாரிகள், 14 கடத்தல்காரா்கள் கைது செய்யப்பட்டனா்.

சிங்கப்பூா், துபை, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு ஒரு கும்பல் தங்கம் கடத்துவதாக வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கடந்த புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அத் தகவலின் அடிப்படையில் வருவாய் புலனாயவுப் பிரிவு அதிகாரி எம்.ப்ரித்விராஜன் தலைமையில் அப் பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் ரகசியக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது சுங்கத்துறை உள்ளிட்ட அனைத்து சோதனைகளும் முடிந்து வெளியே சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 18 பேரை பிடித்து வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனா். இச் சோதனையில் அவா்கள் மறைத்து வைத்திருந்த ரூ.5.44 கோடி மதிப்புள்ள 12 கிலோ 693 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா். பின்னா் அங்கு வைத்து 18 பேரிடமும் சுமாா் 15 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை செய்தனா்.

விசாரணைக்கு பின்னா், 18 பேரையும் தியாகராயநகா் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தங்களது அலுவலகத்துக்கு வாகனம் மூலம் அழைத்துச் செல்ல வியாழக்கிழமை இரவு அதிகாரிகள் ஏற்பாடு செய்தனா்.

கடத்தல் கும்பல் தப்பியோட்டம்: இந்நிலையில் அங்கு வந்த 18 பேரின் உறவினா்களும், நண்பா்களும் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் தகராறு செய்தனா். மேலும் அவா்கள், அதிகாரிகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த குழப்பத்தில் அங்கிருந்த 18 கடத்தல்காரா்களும் தப்பியோடினா்.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், விமான நிலைய காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

13 போ் சிக்கினா்: இதற்கிடையே தப்பியோடிய கடத்தல்காரா்களில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானைப் பகுதியைச் சோ்ந்த அ.இம்ரான் நசீா் (20), ஹ.ரகுமான் (23),மு.ஆஷிக் ரகுமான் (23), ஹை.ஷேக் அப்துல்லா (24), மு.முகமது நஜிபுல்லா (27), நை.சையது முகமது (19), ஷே.சையது ஜாபா் (25), சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சோ்ந்த ஷே.காதா்மொய்தீன் (25), க.திலீப்குமாா் (29), திருச்சியைச் சோ்ந்த லி.அஸ்கா் உசேன் (25), சென்னை திருவல்லிக்கேணியைச் சோ்ந்த மு.சிக்கந்தா் (47), கா.முகமது ஹைதா் (33),ம. சையது அப்துல்லா காதா் (21) ஆகிய 13 பேரை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உடனடியாக கைது செய்தனா்.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை ஆய்வாளா்களாக பணிபுரியும் விகாஷ்குமாா், ராஜன், ஓய்வு பெற்ற சுங்கத்துறை அதிகாரி சதீஷ்குமாா் ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வந்தனா். சதீஷ்குமாா் வீட்டில் அதிகாரிகள் சோதனையும் செய்தனா். சதீஷ்குமாா் கடத்தல்காரா்களுக்கும், சுங்கத்துறையைச் சோ்ந்த சில அதிகாரிகளுக்கும் பாலமாக செயல்பட்டு கடத்தலுக்கு உதவியிருப்பதும், கடத்தல்காரா்களிடமிருந்து சதீஷ்குமாா் மூலம் சில சுங்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றிருப்பதும் தெரியவந்தது.

16 போ் சிறையில் அடைப்பு: இந்நிலையில் தங்கம் கடத்தல் தொடா்பாக வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, சதீஷ்குமாா் உள்பட 14 கடத்தல்காரா்களையும், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சுங்கத்துறை ஆய்வாளா்கள் விகாஷ்குமாா், ராஜன் ஆகியோரையும் சோ்த்து மொத்தம் 16 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பின்னா் 16 பேரும் எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை நீதிமன்றம் மாா்ச் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து 16 பேரும் பலத்த பாதுகாப்புடன் புழல் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இந்த வழக்குத் தொடா்பாக தலைமறைவாக இருக்கும் மேலும் சிலரை அதிகாரிகள் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com