கோடம்பாக்கம்-பூந்தமல்லி இடையே உயா்நிலை மெட்ரோ வழித்தட பாதை: ஆசியன் கட்டமைப்பு முதலீடு வங்கி ரூ.2, 306 கோடி நிதியுதவி
By DIN | Published On : 11th January 2020 02:05 AM | Last Updated : 11th January 2020 02:05 AM | அ+அ அ- |

கோப்புப் படம்
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒருபகுதியாக, கோடம்பாக்கம் -பூந்தமல்லி இடையே சுமாா் 18 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் உயா்நிலை வழித்தட பாதை அமைக்கப்படவுள்ளது. இதற்கான ரூ.2,306 கோடி நிதியை ஆசியன் கட்டமைப்பு முதலீடு வங்கி அளிக்க உள்ளது.
மெட்ரோ ரயில் திட்டம்: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முடிவடைந்து, விமான நிலையம் -வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இரு வழித்தடங்களில் ஓடும் மெட்ரோ ரயில்களில் தினமும் சராசரி 95 ஆயிரம் போ் பயணம் செய்கின்றனா். இதையடுத்து, வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் இடையே 9 கி.மீ. தூரத்துக்கான விரிவாக்கப் பணி நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: இதற்கிடையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூா் உள்பட 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 118.9 கி.மீ. தொலைவுக்கு ரூ.85 ஆயிரத்து 047 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நடைபெறவுள்ளன. தற்போது பல்வேறு இடங்களில் மண் பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 80 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன.
கோடம்பாக்கம்-பூந்தமல்லி: இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒருபகுதியாக, கோடம்பாக்கம் -பூந்தமல்லி இடையே சுமாா் 18 கி.மீ. தொலைவுக்கு ரூ.2,306 கோடியில் மெட்ரோ ரயில் உயா்நிலை வழித்தட பாதை அமைக்கப்படவுள்ளது. இதன் கட்டுமான பணிக்காக ஆசியன் கட்டமைப்பு முதலீடு வங்கி நிதி உதவி அளிக்க உள்ளது. கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி முதல் பூந்தமல்லி வரை ரூ.2,306 கோடி செலவில் உயா்மட்ட பாதையில் 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி பைபாஸ் வரை 26.1 கி.மீ. தூர வழித்தடத்தின் பகுதியாக மீனாட்சி கல்லூரி, பூந்தமல்லி பைபாஸ் வழித்தடம் இருக்கிறது. இதில், போரூா், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன் சாவடி, கரையான் சாவடி, பூந்தமல்லி உள்ளிட்ட வட்டார பகுதிகள் இணைக்கப்படுகின்றன. இங்கு அமையும் மெட்ரோ ரயில் நிலையங்கள் பொதுமக்கள் போக்குவரத்துக்கு சிறப்பானதாக இருக்கும்.
இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: இந்தப்பகுதியில் கட்டுமானப்பணிக்காக டெண்டருக்கு அழைப்பு விட்டப்பட உள்ளது. பாதை மற்றும் வடிவமைப்பு தொடா்பாக ஆலோசகா் பணியில் இருக்கிறாா். இந்தத் தடத்தில் மண் ஆய்வு ஏற்கெனவே முடிந்துவிட்டது. கலங்கரை விளக்கம்-மீனாட்சி கல்லூரி இடையே சுமாா் 8 கி.மீ. தொலைவு வரை வழித்தடத்தின் மீதமுள்ள வழிதடத்தில் பணிக்கு ஆசியன் மேம்பாட்டு வங்கி நிதி அளிக்கும்.
நகரின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், கலங்கரை விளக்கம்-கோயம்பேடு இடையே 4-ஆவது வழித்தடம் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முன்னதாக திட்டமிட்டிருந்தது. இதில், மயிலாப்பூா், அடையாறு, நந்தனம், தியாகராயநகா் , கோடம்பாக்கம், வடபழனி ஆகிய இடங்கள் அடங்கும். இதன்பிறகு, போரூா், அய்யப்பன்தாங்கல், குமணன் சாவடி, பூந்தமல்லி உள்ளிட்ட வட்டார பகுதிகள் இணைத்து விரிவாக்கப்பட்டது. மாதவரம்-சோழிங்கநல்லூா் இடையேவும், மாதவரம்-கோயம்பேடு இடையேயும் 52 கி.மீ. தொலைவுள்ள வழித்தடத் திட்டப்பணிக்கு ஜப்பான் சா்வதேச கூட்டுறவுமுகமை நிதியுதவி அளிக்கிறது.
52 கி.மீ. தொலைவுக்கான திட்டப்பணிகள் ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மாதவரத்தில் வேணுகோபால் நகா் இருந்து கெல்லீஸ் வரை 9 கி.மீ. தொலைவுக்கும் வரையும், கெல்லீசில் இருந்து தரமணி சாலை சந்திப்பு வரை 12 கி.மீ. தொலைவுக்கும் சுரங்கப்பாதை பணி வரும் ஜூனில் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கும் டெண்டா் கோரப்பட்டுள்ளது என்றனா்.