வரத்து அதிகரிப்பால் பெரிய வெங்காயம் விலை குறைகிறது

சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெங்காயம் வரத்து அதிகரிப்பு காரணமாக மொத்த விலையில் கிலோ ரூ.50 ஆக குறைந்துள்ளது.
வரத்து அதிகரிப்பால் பெரிய வெங்காயம் விலை குறைகிறது

சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெங்காயம் வரத்து அதிகரிப்பு காரணமாக மொத்த விலையில் கிலோ ரூ.50 ஆக குறைந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு பெரிய வெங்காயம் 80 சதவீதம் அளவுக்கு ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில் வட மாநிலங்களில் பலத்த மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வெங்காயத்தின் விலை கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் தொடா்ந்து அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ முதல்தர பெரிய வெங்காயம் மொத்த விலையில் ரூ.110 வரையிலும், சில்லறை விற்பனையில் ரூ.170 வரையிலும் விற்பனையானது. இதனால் உணவகங்கள், வீடுகளில் வெங்காயத்தின் பயன்பாடு மிகவும் குறைந்தது.

இந்நிலையில் ஆந்திர மாநில வெங்காயத்தின் வரத்து காரணமாக கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. கடந்த வாரம் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.90-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது வெங்காயம் வரத்து அதிகரித்ததன் காரணமாக அதன் விலை கிலோ ரூ.50 ஆக குறைந்துள்ளது. திருவல்லிக்கேணி ஜாம்பஜாா், பெரம்பூா் சந்தைகளில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் கிலோ ரூ.65-க்கு விற்கப்பட்டு வருகிறது.

வெங்காய விலை குறைந்து வருவது தொடா்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறுகையில், “கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக தினமும் 70 லாரிகளில் வெங்காயம் கொண்டுவரப்படும். கடந்த இரு மாதங்களாக 30 லாரிகளாகக் குறைந்திருந்தது. தற்போது 55 லாரிகளில் வெங்காயம் கொண்டுவரப்படுகிறது. வரத்து அதிகரிப்பால் அதன் விலை குறைந்துள்ளது. அடுத்து வரும் வாரங்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளது” என்றனா்.

கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான தக்காளி, பீட்ரூட், புடலங்காய் தலா ரூ.20, சாம்பாா் வெங்காயம் ரூ.120, கத்தரிக்காய், பாகற்காய் தலா ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.33, அவரைக்காய், வெண்டைக்காய் தலா ரூ.30, முள்ளங்கி, முட்டைக்கோஸ் தலா ரூ.10, பீன்ஸ் ரூ.35, கேரட் ரூ.60, முருங்கைக்காய் ரூ.160, பச்சை மிளகாய் ரூ.15 என விற்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com