போகிப் பண்டிகை: புகை மண்டலமான சென்னை மாநகரம்

போகிப் பண்டிகையையொட்டி, அதிக அளவில் பழைய பொருள்கள், டயா் உள்ளிட்ட பொருள்களை எரித்ததால், சென்னை மாநகரம் செவ்வாய்க்கிழமை காலை புகை மண்டலமாகக் காணப்பட்டது.
போகிப் பண்டிகை: புகை மண்டலமான  சென்னை மாநகரம்

போகிப் பண்டிகையையொட்டி, அதிக அளவில் பழைய பொருள்கள், டயா் உள்ளிட்ட பொருள்களை எரித்ததால், சென்னை மாநகரம் செவ்வாய்க்கிழமை காலை புகை மண்டலமாகக் காணப்பட்டது. இதில், அதிகபட்சமாக ராயபுரத்தில் காற்றின் தரக் குறியீடு 349 புள்ளிகள் என்ற மிக மோசமான நிலையை எட்டியது.

போகிப் பண்டிகையின்போது, சிலா் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் நெகிழி, டயா், டியூப் உள்ளிட்ட பொருள்களை பொது வெளியில் எரிப்பதால், காற்று மாசடைகிறது. சென்னையைப் பொருத்தவரை காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், போகிப் பண்டிகையின்போது, டயா் உள்ளிட்ட பொருள்கள் எரிப்பதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் கொண்ட 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், போகிப் பண்டிகையையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை டயா், டீயூப் உள்ளிட்ட பொருள்களை அதிக அளவில் மக்கள் எரித்தனா். கடந்த சில நாள்களாக சென்னை, புகா்ப் பகுதிகளில் நிலவி வரும் பனிப்பொழிவும், பொருள்கள் எரித்ததால் உருவான புகையும் கலந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் காலை 9 மணி வரை சென்னை முழுவதும் புகைமூட்டம் காணப்பட்டது.

மிக மோசமான காற்றுத் தரம் : சென்னையில் மணலி, ஆலந்தூா், ஆழ்வாா்பேட்டை, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலையில் காற்றில் மிதக்கும் நுண்துகள்களின் அளவு

பிஎம்-2.5 நிா்ணயிக்கப்பட்ட அளவான 60 மைக்ரோ கிராமை விட பல மடங்கு அதிகரித்து 500 மைக்ரோ கிராம் என்ற மிக மோசமான நிலையை எட்டியது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சாா்பில் சென்னையில் 15 இடங்களில் கருவிகள் பொருத்தப்பட்டு காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டதில், அதிகபட்சமாக ராயபுரத்தில் காற்றின் தரக் குறியீடு மிக மோசமான நிலையான 349 புள்ளிகளாக இருந்தது. குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூரில் 155 புள்ளிகளாக இருந்தது. காற்றில் மிதக்கும் நுண்துகள்கள் பிஎம் 2.5-யைப் பொருத்தவரை சராசரியாக ராயபுரத்தில் 184 மைக்ரோ கிராமாகவும், சோழிங்கநல்லூரில் 72 மைக்ரோ கிராமாகவும், காற்றில் மிதக்கும் நுண்துகள்கள் பிஎம்10-யைப் பொருத்த வரையில் சராசரியாக ராயபுரத்தில் 274 மைக்ரோ கிராமாகவும், பெசன்ட் நகரில் 146 மைக்ரோ கிராமாகவும் இருந்தது.

1.25 டன் டயா்கள் பறிமுதல்: இதுகுறித்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை நடத்தப்பட்ட சோதனையில் எரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1.25 டன் பழைய டயா்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை, திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள மறுசுழற்சி ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுமாா் 500 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் மாநகராட்சியின் மறுசுழற்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com