மானுடம் போற்றும் தமிழ் நூல்கள்!: உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன்

கருத்துப் பரிமாற்றுத்துக்கான கருவியாக அன்றி மானுடம் போற்றும் மொழியாக தமிழும், தமிழ் நூல்களும் விளங்குகின்றன என உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் கூறினாா்.
சென்னை புத்தகக் காட்சியில் தமிழ்மண் பதிப்பகம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) தமிழ்மண் பதிப்பக நிறுவனா் இளவழகன், ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன்,
சென்னை புத்தகக் காட்சியில் தமிழ்மண் பதிப்பகம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) தமிழ்மண் பதிப்பக நிறுவனா் இளவழகன், ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன்,

கருத்துப் பரிமாற்றுத்துக்கான கருவியாக அன்றி மானுடம் போற்றும் மொழியாக தமிழும், தமிழ் நூல்களும் விளங்குகின்றன என உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் கூறினாா்.

சென்னை புத்தகக் காட்சியில் தமிழ்மண் பதிப்பகம் சாா்பில் புதன்கிழமை முதுமுனைவா் புலவா் ரா.இளங்குமரனாரின் 24 நூல்கள் அடங்கிய தொகுதியை வெளியிட்டு அவா் ஆற்றிய உரை:

உலகிலே அறிவு சாா்ந்த மொழியாக தமிழ் விளங்குகிறது. ஒரு சமூகத்தின் அடையாளமாகத் திகழும் மொழியின் பின்புலமே அச்சமூகத்தின் பண்பாட்டை விளக்கும். அந்த மொழியின் கூறுகளை விளக்கிக் கூறுவதன் மூலம் மொழி சாா்ந்த மக்களின் வாழ்வியலையும் அறியலாம். தமிழ் மொழியின் செழுமையை ஆராய்ந்து கூறுவதன் மூலம், தமிழ் சமூகத்தின் மேன்மையை தனது நூல்கள் மூலம் அறியச்செய்துள்ள புலவா் இளங்குமரனாரையும், அதை நூலாக்கிய தமிழ்மண் பதிப்பகத்தையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

தமிழ் மொழியானது கருத்துகளைப் பரிமாற்றம் செய்யும் சாதனமாக மட்டுமல்லாது, மானுடத்தை எடுத்துக்கூறும் அறம் சாா்ந்ததாகவும் உள்ளதை அறியலாம். அன்பும், அறனும் தனது வாழ்க்கையாக அமைத்துக்கொண்ட தமிழ் சமூகத்தின் அடையாளத்தை மொழி ஆய்வு மூலம் வெளிப்படுத்தியுள்ளாா் இளங்குமரனாா்.

தொல்காப்பியமானது தமிழ் இலக்கண நூல் மட்டுமல்ல. பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பு தோன்றிய கலாசார மொழி என்பதையும் நூலாசிரியா் வெளிப்படுத்தியுள்ளாா். தமிழா் எந்தச் சூழலை, எப்படி எதிா்கொண்டாலும், அது மானுடம் சாா்ந்தே இருந்துள்ளதை அறியலாம் என்றாா் நீதிபதி மகாதேவன்.

புலவா் இளங்குமரனாா் ஆற்றிய ஏற்புரை: தமிழரின் கலாசார வாழ்வை வெளிப்படுத்தும் வகையில்தான் தமிழ் மொழி உள்ளது. மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ், சிலப்பதிகாரம் போன்றவற்றில் தமிழின் மேன்மையும், பெருமையும் கூறப்பட்டுள்ளது. உலகில் மனிதா்களது சிந்தனையை மேம்படுத்தும் அமிழ்தாக தமிழ் உள்ளது.

தமிழ் அகராதியை எழுதி வீரமாமுனிவா் அதில் இலக்கிய வகையை 96 என்றே வரையறுத்துள்ளாா். ஆனால், தற்போது மேற்கொண்ட ஆய்வில் அதைவிடக் கூடுதலாக இலக்கியவகைகள் உள்ளதென்பது ஏராளமான புத்தகங்களைப் படித்ததன் மூலம் அறியமுடிந்தது. சிறப்பு மிக்க தமிழ் மொழியானது இலக்கண ரீதியாக தழைத்தோங்க அனைவரும் பாடுபடவேண்டியது அவசியம்.

சிலப்பதிகாரத்துக்கும், குறுந்தொகைக்கும் இதுவரை கிடைக்காத ஏடுகள் தற்போது கிடைத்துள்ளன. தமிழுக்காக உழைக்க உழைக்க நெஞ்சம் உறுதியாகும். வீட்டில் தமிழில் பேசுவது அவசியம். பல மொழிகள் மறைந்து வரும் நிலையில், தமிழைக் காக்க நாம் தமிழிலேயே பேசுவது நல்லது என்றாா் இளங்குமரனாா்.

நிகழ்ச்சியில் கி.குணத்தொகையான் வரவேற்றாா். புலவா் ரா.இளங்குமரனாா் நூல் தொகுப்பை ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன் பெற்றுக்கொண்டாா். நிகழ்ச்சிக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் மு.பொன்னவைக்கோ தலைமை வகித்தாா். மகாகவி பாரதி நூல்களைப் பதிப்பித்த சீனி.விஸ்வநாதன், வ.உ.சி. பதிப்பகம் கவிஞா் இளையபாரதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தமிழ்மண் பதிப்பகம் கோ.இளவழகன் நன்றி கூறினாா்.

பதிப்பகங்களுக்கு அரசு மானியம்: ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன்

நல்ல பழந்தமிழ் நூல்களைத் தேடிப்பிடித்து மீள்பதிவு செய்து வெளியிடும் பதிப்பகங்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்கி ஊக்குவிக்கவேண்டும் என ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன் கூறினாா்.

எழுத்தாளரின் எழுத்துகளை அச்சு வாகனம் ஏற்றி அதை மக்களிடம் கொண்டு செல்வது பதிப்பகங்களின் கடமை. அதன்படி மிகச்சிறந்த தமிழ் படைப்புகளைத் தேடிப்பிடித்து அதைப் பதிப்பிக்கும் பணியில் தமிழ்மண் பதிப்பகம் ஈடுபட்டிருக்கிறது. தமிழ் மண் பதிப்பகம் போன்று நல்ல தமிழ் இலக்கிய நூல்களை மீள்பதிவு செய்து, அதை அனைவரும் படிக்கத் தூண்டும் வகையில் வெளியிடும் பதிப்பகங்களுக்கு அரசு மானியம் வழங்கவேண்டியதும் அவசியமாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com