திறமைக்கு வாய்ப்பளிக்கும் சமூகமே முன்னேறும்!

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் ஒருவருக்கு திறமை அடிப்படையில்  சம வாய்ப்பை வழங்கும் சமூகமே எதிர்காலத்தில் முன்னேற்றமடையும் என முன்னாள் அமைச்சர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன்
திறமைக்கு வாய்ப்பளிக்கும் சமூகமே முன்னேறும்!

சென்னை: கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் ஒருவருக்கு திறமை அடிப்படையில்  சம வாய்ப்பை வழங்கும் சமூகமே எதிர்காலத்தில் முன்னேற்றமடையும் என முன்னாள் அமைச்சர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.
சென்னை புத்தகக் காட்சியில் யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் சார்பில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சே.சாதிக் எழுதிய "ஒரு துணைவேந்தரின் கதை (தன்வரலாறு)' நூலின் 4 பாகங்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தும், நூல் முதல் படியை வெளியிட்டும்  பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் பேசியது:
கல்விபெறும் வாய்ப்பு, அதற்கான போதிய இடங்கள், கல்வி கற்பதற்கான நிதியுதவி ஆகியவற்றை  அனைவருக்கும் கிடைக்கச் செய்தால் உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை உயர்ந்து விடும். ஆனால், அவை அனைவருக்கும் கிடைப்பதில்லை என்பதே உண்மை.
பணமிருப்பவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் மருத்துவராகிவிடுவதும், நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் பணமில்லை என்பதற்காக மருத்துவப் படிப்பில் சேரமுடியாத நிலையும் நல்லதல்ல. அதனால், சமூகத்துக்கு நஷ்டமே ஏற்படும். ஆகவே அனைவரது திறமைக்கு ஏற்ப கல்வி கற்பதிலும், வேலைவாய்ப்பைப் பெறுவதிலும் சம வாய்ப்பு அளிக்கப்படுவது அவசியம். 
இலங்கையில் கல்வி, வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு சரியான சமமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால்தான் அங்கு போராட்டமும், போர்ச்சூழலும் ஏற்பட்டது. உலகமயமாக்கல் சூழலில் எந்த இனமும் தனியாக செயல்படுவது கடினம். 
தனித்துவம் வாய்ந்ததாக கூறப்பட்ட ஜப்பானில் கூட தற்போது வயதானவர்கள் அதிகமாகி விட்டதால், வேலைகளுக்கு சீனர்கள் உள்ளிட்டோரை அங்கு வரவேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
கல்வி நிலையங்களில் மாணவர்களின் திறமையை அறிந்து, அதை வெளிப்படுத்தும் கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து அதற்கேற்ப அவர்களை ஊக்குவிக்கும் பொறுப்பு பெற்றோருக்கு உண்டு. மனதின் மாசுகளை அகற்றும் கடமையை ஆசிரியர்கள் உணர வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், கே.என்.பாஷா, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.மன்னர்ஜவஹர், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரித் தாளாளர் எஸ்.பத்ஹூர்ரப்பானி, தொழிலதிபர் ஆர்.எம்.பைரவன் ஆகியோர் நூல் ஆய்வுரை வழங்கினர். 
பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் முன்னிலை வகித்தார். ஆர்.எம்.கே.கல்வி குழுமம் நிறுவனர் ஆர்.முனிரத்தினம், தொழிலதிபர்கள் எஸ்.அஹமதுமீரான், அப்துல்காதர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் எஸ்.எஸ்.ஷாஜகான் வரவேற்றார். சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சே.சாதிக் ஏற்புரையாற்றினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com