உள்ளம், உடல் நலனைக் காக்கும் அருமருந்து திருக்குறள்!

நமது உடல், உள்ளத்தின் நலனைக் காக்கும் அருமருந்தாக திருக்குறள் விளங்குகிறது என சென்னை காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவின் துணை ஆணையரும், எழுத்தாளருமான இரா.திருநாவுக்கரசு கூறினார்.
சென்னை புத்தகக் காட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்துரையில் 'திருக்குறள் சொல்லும் வாழ்வியல் தீர்வுகள்' எனும் தலைப்பில் பேசும் காவல் துணை ஆணையர் இரா. திருநாவுக்கரசு. உடன் பபாசி முன்னாள் தலைவர் வய
சென்னை புத்தகக் காட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்துரையில் 'திருக்குறள் சொல்லும் வாழ்வியல் தீர்வுகள்' எனும் தலைப்பில் பேசும் காவல் துணை ஆணையர் இரா. திருநாவுக்கரசு. உடன் பபாசி முன்னாள் தலைவர் வய

சென்னை:  நமது உடல், உள்ளத்தின் நலனைக் காக்கும் அருமருந்தாக திருக்குறள் விளங்குகிறது என சென்னை காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவின் துணை ஆணையரும், எழுத்தாளருமான இரா.திருநாவுக்கரசு கூறினார்.

சென்னை பபாசி புத்தகக் காட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்துரை நிகழ்ச்சியில் "திருக்குறள் சொல்லும் வாழ்வியல் தீர்வுகள்' எனும் தலைப்பில் அவர் ஆற்றிய உரை: புத்தாடை அணிந்தால் நம்மை அழகாகப் பார்ப்பவர்கள் கூட புத்தகம் வாங்கிச் சென்றால் அறிவாளியாகப் பார்ப்பார்கள். நமது மனதில் பயிராக விதைக்கப்படும் சிந்தனைகளைத் தருவது புத்தகங்களே. 

தற்போது புத்தகம் பிடிக்க வேண்டிய இளந்தலைமுறையினரின் கைகளில் கைபேசிகள் உள்ளன. கைபேசிகளில் அனுப்பும் தகவல்களால் பல பிரச்னைகள் ஏற்படுவதையும் காணமுடிகிறது. ஆனால், புத்தகங்களைப் படித்தால் பிரச்னைகள் வராது. மனித சிந்தனையின் ஊற்றாக இருப்பவை புத்தகங்களே. 

நமது குழந்தைகளுக்கு நாம் அறிமுகப்படுத்தும் பொருள்களே அவர்களது எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் புத்தகங்களை அறிமுகப்படுத்துவது அவசியமாகும். 

உடல், உயிர் இருந்தால் மனிதர் என நாம் கூறலாம். ஆனால், அறிஞர் அரிஸ்டாட்டில் சமூகத்தில் மனித உருவமும் ஒரு விலங்குதான் என்கிறார். மனிதர்களின் மனதிற்குள்ளும் விலங்குகளின் குணநலன்கள் பொதிந்திருக்கலாம். ஆகவே உடல், மனம் இரண்டுக்கும் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்தாகவே திருக்குறள் உள்ளது. 

உடல் நலம் பேண நாம் எப்படி செயல்படவேண்டும் என்பதை திருக்குறள் விளக்குகிறது. திருமாலிகைத் தேவர் கூறியபடி அதிகாலை நடக்க வேண்டும். குளிர்ச்சியான தரையில் படுக்கக் கூடாது.  உணவு செறித்த பிறகே அடுத்த உணவை உண்ண வேண்டும் என்பது இன்றைய அறிவியலாலும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் தமது குறளில் "மருந்தென வேண்டாவாம் யாக்கை' என்ற குறளில் தெளிவாக அதைக் கூறியிருக்கிறார். 

உடலுக்கு அடுத்தது மனம். நமது மனதை எப்படி வைத்தால் வாழ்க்கை சிறக்கும் என்பதை வள்ளுவர் "மனத்துக்கண் மாசிலன் ஆதல்' என்ற குறளில் அழகாகத் தெளிவுபடுத்தியுள்ளார். மாசில்லாத மனது இருந்தால் அனைத்து நலன்களும் இருக்கும் என்பதே அவரது கருத்து. மனதின் மாசுகளை அகற்றுபவை நல்ல புத்தகங்கள்தான் என்பதை உணரவேண்டும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் திருநாவுக்கரசு தனது உரையின் பொருளுக்கு ஏற்ற திருக்குறளை கூறிய பார்வையாளர்களுக்குத் திருக்குறள் புத்தகத்தையும் பரிசளித்தார். 

விழாவில் டாக்டர் அப்துல்கலாமின் "வளர்ந்த இந்தியா 2020' என்ற தலைப்பில் கலாம் விஷன் திட்டத் தலைவர் திருச்செந்தூரான் உரையாற்றினார். பபாசி செயற்குழு உறுப்பினர் குமரன் பதிப்பகம் எஸ்.வயிரவன் வரவேற்றார். எழுத்தாளர் தனுஷ்கோடி லாவண்ய ஷோபனா, பபாசி செயலர் எஸ்.கே.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com