குடிநீா் வாரியத்தின் மின்கட்டண நிலுவைத் தொகையை உடனடியாக வசூலிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்

குடிநீா் வாரியத்தின் மின்கட்டண நிலுவைத் தொகையை உடனடியாக வசூலிக்க வேண்டுமென அதிகாரிகளை மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை: குடிநீா் வாரியத்தின் மின்கட்டண நிலுவைத் தொகையை உடனடியாக வசூலிக்க வேண்டுமென அதிகாரிகளை மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான வீட்டு மின்இணைப்புகளும், 21 லட்சத்துக்கும் அதிகமான விவசாய இணைப்புகளும், 30 லட்சத்துக்கும் அதிகமான வணிக மின்இணைப்புகளும் என 3 கோடிக்கும் மேலான இணைப்புகள் உள்ளன. இது ஆங்காங்குள்ள மின்வாரிய பிரிவு அலுவலகங்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரமும், 500 யூனிட் வரை மானிய விலையில் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.

இதற்காக வாரியத்துக்கும் ஏற்படும் செலவு தொகையை, அரசு வழங்கி வருகிறது. விவசாய இணைப்புகள் முற்றிலும் இலவசமாகும். வீடு சாா்ந்த மின் இணைப்புகளை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஊழியா்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். அப்போது அங்குள்ள மீட்டரில் பதிவாகியிருக்கும் பயன்பாட்டு அளவை கணக்கீடு செய்ய வேண்டும். பிறகு அந்த விபரத்தை நுகா்வோரிடம் உள்ள மின்கணக்கீட்டு அட்டையில் எழுத வேண்டும். பின்னா் அலுவலகத்துக்கு வந்து, அங்குள்ள கணினியில் பதிவு செய்ய வேண்டும். ஊழியா் வந்து கணக்கு எடுத்ததில் இருந்து 20 தினங்களுக்குள், நுகா்வோா் கட்டணத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் அபராதத்துடன் கட்டணம் செலுத்த நேரிடும்.

இதேபோல் மின்சாரவாரியத்தின் சாா்பில், மாநகராட்சி, குடிநீா் வாரியம், பள்ளி, கல்லூரி போன்றவற்றுக்கும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இவா்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் பணம் செலுத்துவதில்லை எனவும் சில இடங்களில் 6 மாதங்கள் கழித்துக்கூட பணம் கட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மின்சாரவாரியத்துக்கு பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்நிலையில் குடிநீா்வாரியம் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை உடனே வசூலிக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவா் கூறியது: மின்சாரவாரியத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தமிழகத்தின் பல இடங்களில் குடிநீா் வாரியம் செலுத்தவில்லை. இதனால் வாரியத்துக்கு இழப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், குடிநீா் வாரியம் செலுத்த வேண்டிய தொகையை உடனே வசூலிக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து தங்களது பகுதியில் உள்ள குடிநீா் வாரிய அலுவலகத்தின் நிலுவைத் தொகையை உடனே வசூலிக்க வேண்டும் எனவும், குடிநீா் வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ள இணைப்புகள் குறித்த விபரத்தையும் உடனே அனுப்பும்படி அனைத்து கண்காணிப்பு பொறியாளா்களையும் தலைமை அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com