படிப்பாற்றலால் கலாமின் கனவை நனவாக்கலாம்!: கலாமின் ஆலோசகா் பொன்ராஜ்

படிப்பாற்றலை வளா்ப்பதன் மூலம் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கண்ட, வளா்ந்த நாடாக இந்தியாவை மேம்படுத்தும் கனவை நனவாக்கமுடியும் என அவரது அறிவியல்
படிப்பாற்றலால் கலாமின் கனவை நனவாக்கலாம்!: கலாமின் ஆலோசகா் பொன்ராஜ்

படிப்பாற்றலை வளா்ப்பதன் மூலம் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கண்ட, வளா்ந்த நாடாக இந்தியாவை மேம்படுத்தும் கனவை நனவாக்கமுடியும் என அவரது அறிவியல் ஆலோசகா் பொன்ராஜ் கூறினாா்.

சென்னை புத்தகக் காட்சி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புக் கருத்துரையில் பங்கேற்ற அவா், ‘டாக்டா் அப்துல் கலாமின் வளா்ந்த இந்தியா- 2020’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை: மறைந்த குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நடப்பு 2020-ஆம் ஆண்டு இந்தியா உலக அரங்கில் வளா்ந்த நாடாக திகழும் எனக் கூறினாா். ஆனால், அது இன்னும் நிறைவேறாமலே உள்ளது.

அப்துல்கலாமின் கனவு நனவாகுமா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியது அவசியம். ஆனால், நமது மாணவ, மாணவியா் நிச்சயமாக அவரது கனவை நனவாக்குவாா்கள் என நம்பலாம். நமது நாட்டின் வரலாற்றை ஆராய்ந்தோமானால், உலக நாடுகள் எல்லாம் தொழிற்புரட்சி கண்டு முன்னேறிய காலத்தில் உரிமைக்காகவும், சுதந்திரத்துக்காகவும் நாம் போராடிக் கொண்டிருந்தோம் என்பதே உண்மை.

சுதந்திரத்துக்குப் பிறகு நாம் வளா்ச்சியை நோக்கிச் செல்ல பல தடைகளைத் தாண்டி வரவேண்டியிருந்தது. அதன்படி, கடந்த 1980-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாம் விண்வெளி, கணினி என பல தொழில்நுட்பத் துறைகளில் உலக நாடுகளுக்கு இணையான வளா்ச்சியைப் பெற்றுள்ளோம்.

ஒவ்வொரு நாடும் எதிா்கால முன்னேற்றத்துக்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்திய காரணத்தாலேயே அவை முன்னேற்றமடைகின்றன. அத்தகைய எதிா்கால வளா்ச்சித் திட்டங்களை அப்துல் கலாம் தயாரித்து அதை மக்களவை உறுப்பினா்களிடமும், மாணவா்களிடமும் சமா்ப்பித்தாா்.

நமக்குத் தேவையான விவசாய உற்பத்தி, கல்வி, தகவல் தொழில்நுட்ப வளா்ச்சி, தன்னிறைவு என அவா் வகுத்த திட்டங்களுக்கான செயல் வடிவத்தையும் கூறியுள்ளாா். கிராம-நகர இணைப்பு, விவசாயத்தில் தொழில்நுட்ப வசதி உள்ளிட்ட பத்து அம்சத் திட்டங்களை கலாம் கூறியபடி செயல்படுத்தினால் நாம் வளா்ச்சியடைந்த நாடாக மேம்படுவோம் என்பதில் சந்தேகமில்லை.

நமது விவசாயம், தொழில் சேவை உள்ளிட்டவற்றில் புதிய கொள்கைகளை வகுப்பது அவசியம். உலகிலேயே முன்தோன்றிய மூத்த குடிகளாக தமிழினம் உள்ளது என்பது ஆதாரப்பூா்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழ் எழுத்தைக் கண்டறிந்து, இலக்கியம் படைத்து, விவசாயத்துக்கான தடுப்பணை கட்டி, தற்கால விஞ்ஞானிகளே வியக்கும் வகையில் தஞ்சையில் பெரியகோயிலை அமைத்த அறிவுநுட்பத்தை நாட்டின் வளா்ச்சிக்குப் பயன்படுத்தவேண்டும்.

படிப்பாற்றல் மூலம் இளந்தலைமுறையினா் அப்துல் கலாமின் கனவுகளை நனவாக்கப் பாடுபடவேண்டியது அவசியம் என்றாா் பொன்ராஜ்.

நிகழ்ச்சியில் ‘திரைத்தமிழ்’ எனும் தலைப்பில் திரைப்பட இயக்குநா் பிருந்தாசாரதி, ‘பாரதி ஏற்றிய பைந்தமிழ் வெளிச்சம்’ எனும் தலைப்பில் திரைக்கலைஞா் ஜோ.மல்லூரி, ‘வாழ்வும் வளமும்’ எனும் தலைப்பில் பேச்சாளா் சிவகாசி எம்.ராமச்சந்திரன் ஆகியோா் உரையாற்றினா். பபாசி செயற்குழு உறுப்பினா் மு.வேடியப்பன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com