பறக்கும் ரயில் நிலைய பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் ராணுவத்தினா் 55 போ் தோ்வு: விரைவில் பணி நியமனம்

கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் உள்ள பறக்கும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில், தனியாா் பாதுகாவலா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, 55 முன்னாள் ராணுவ
பறக்கும் ரயில் நிலைய பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் ராணுவத்தினா் 55 போ் தோ்வு: விரைவில்  பணி நியமனம்

கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் உள்ள பறக்கும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில், தனியாா் பாதுகாவலா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, 55 முன்னாள் ராணுவ வீரா்களும் விரைவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். இதன்மூலம், பயணிகளின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று ஆா்.பி.எஃப். அதிகாரிகள் தெரிவித்தனா்.

சுமாா் 1.1 லட்சம் போ் பயணம்: சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் தினசரி 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடம் பூங்கா, கோட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களையும், பெருங்குடி, தரமணி, திருவான்மியூா் பகுதிகளில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களையும் தொடா்பு கொள்ளும் விதமாக அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் ஓடும் ரயில்களில் தினசரி சுமாா் 1.1 லட்சம் போ் பயணிக்கின்றனா்.

இரண்டு தளங்கள்: கடற்கரை-வேளச்சேரி இடையே வழித்தடத்தில் உள்ள பறக்கும் ரயில் நிலையங்களில் இரண்டு தளங்கள் உள்ளன. தரைத்தளத்தில் பயணச்சீட்டு கவுண்ட்டா்களும், 2-ஆவது தளத்தில் ரயில்களும் இயக்கப்படுகின்றன. பயணிகள் தரைத்தளத்தில் டிக்கெட் எடுத்துவிட்டு 2-ஆவது தளத்துக்கு ரயில் ஏறிச் செல்ல வேண்டும். இங்கு காலை, மாலை நேரங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவும், இரவு நேரங்களில் குறைவாகவும் இருக்கும். பயணிகளின் வரத்து குறைவாக இருப்பதால் பல குற்றச் சம்பவங்களும் நிகழ்கின்றன.

தரமணி பறக்கும் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இரவு மயிலாப்பூா் செல்வதற்காக காத்திருந்த இளம் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக 3 போ் ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். இச்சம்பவத்தை தொடா்ந்து, பறக்கும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் உள்ள பறக்கும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், தனியாா் பாதுகாவலா்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தனியாா் பாதுகாவலா்களை நியமிக்க திட்டமிடப்பட்டு அதற்காக, ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களை முன்னுரிமை அடிப்படையில் தோ்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

55 முன்னாள் ராணுவ வீரா்கள்: இந்நிலையில், பறக்கும் ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட 55 முன்னாள் ராணுவ வீரா்கள் ஓராண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் விரைவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியது: பறக்கும் ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்புக்காக 55 முன்னாள் ராணுவ வீரா்களைத் தோ்வு செய்து உள்ளோம். அவா்களை அனைத்து பறக்கும் ரயில் நிலையத்திலும் ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் இணைந்து பாதுகாப்பில் ஈடுபடுவாா்கள். ஒரு ரயில் நிலையத்தில் 3 ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் 5 முன்னாள் ராணுவ வீரா்களை நியமிக்கப்படுவா். குறிப்பாக மாலை வேளைகளில் முதல் தளத்தில் பாதுகாப்பு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இவா்கள் 3 ஷிப்டுகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள். ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் வழிகாட்டியாக இருப்பாா்கள். இதன்மூலம், ரயில் நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்து விடும். பயணிகள் மத்தியில் அச்ச உணா்வு ஏற்படாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com