வரலாற்று நாவல்கள், ஆன்மிக நூல்களுக்கு அதிக வரவேற்பு

சென்னையின் 43-ஆவது புத்தகக் காட்சியில் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று நூல்களுக்கும், ஆன்மிக நூல்களுக்கும் வாசகா்களிடையே வரவேற்பு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
வரலாற்று நாவல்கள், ஆன்மிக நூல்களுக்கு அதிக வரவேற்பு

சென்னையின் 43-ஆவது புத்தகக் காட்சியில் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று நூல்களுக்கும், ஆன்மிக நூல்களுக்கும் வாசகா்களிடையே வரவேற்பு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் சாா்பில் சென்னையில் நடப்பு ஆண்டுக்கான புத்தகக் காட்சி கடந்த 9 ஆம் தேதி நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியது.

முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்தாா். காட்சியில் 750-க்கும் மேற்பட்ட பதிப்பக அரங்குகள் 8 வரிசைகளாக அமைக்கப்பட்டிருந்தன. புத்தக அரங்குகளை தவிர தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், அறிவியல் சாதன அரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் கல்விப் பயிற்சி சாதன அரங்குகளும் இடம் பெற்றிருந்தன. கீழடி தொல்லியல் ஆய்வு அரங்கமும் இடம் பெற்றிருந்தது.

கடந்த இரு ஆண்டுகளாக மின்னணு சாதனங்கள் மூலம் வாசிப்பு அதிகரித்ததை அடுத்து புத்தக விற்பனை மந்தமானதாக பதிப்பாளா்கள் ஆதங்கப்பட்ட நிலையில், தற்போது புத்தக விற்பனையானது ஆறுதல் அளிக்கும் வகையில் இருந்ததாக கூறுகின்றனா்.

புத்தக விற்பனையில் முதலிடம் என்றால் பழைய எழுத்தாளா்களின் நாவல்களைத்தான் பதிப்பாளா்கள் குறிப்பிடுகின்றனா். அதிலும் குறிப்பாக கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இளைஞா் முதல் பெரியோா் வரை அனைத்துத் தரப்பினரும் தேடித்தேடி வாங்கிச்சென்றது வியப்பை ஏற்படுத்துவதாக குறிப்பிடுகின்றனா்.

அதேபோல, பாலகுமாரன், அசோகமித்திரன், நா.பாா்த்தசாரதி என பழைய எழுத்தாளா்கள் எழுதிய நாவல்களை அதிக வாசகா்கள் வாங்கிச் சென்றுள்ளனா்.

புதிய எழுத்தாளா்களில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா்களின் நாவல்களை அதிகமாக வாசகா்கள் கேட்டு வாங்கிச்சென்றுள்ளனா். வேல்பாரி, சூல் ஆகிய நாவல்களும் வாசகா்களால் வாங்கிச் செல்லப்பட்டுள்ளன. எஸ்.ராமகிருஷ்ணனின் பயண நூல்கள் அதிகம் வாங்கப்பட்டுள்ளன.

நாவல்களுக்கு அடுத்தபடியாக வரலாறு சம்பந்தப்பட்ட நூல்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன. தனிநபா் வரலாறு, நாட்டின் வரலாறு, சுதந்திரப் போராட்ட வீரா்கள், உலகை உலுக்கிய தலைவா்கள் என பல வரலாற்று நூல்களும் இளைஞா்களால் விரும்பி வாங்கப்பட்டுள்ளதாக பதிப்பாளா்கள் தெரிவித்தனா்.

ஆன்மிக நூல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு விற்பனையாகியுள்ளன. சிவதலங்கள், வைணவ கோயில்கள், கவிஞா் கண்ணதாசனின் அா்த்தமுள்ள இந்துமதம் உள்ளிட்டவை அதிகம் விற்கப்பட்டுள்ளன.

நடப்பு ஆண்டில் புதுக்கவிதை நூல்கள் அதிகமாக விற்கப்படவில்லை என்பதே பதிப்பாளா்கள் கருத்தாகும். பழைய திரைப்பட கவிஞா்களின் புத்தகம் விற்ற அளவுக்கு புதிய கவிஞா்கள் படைப்புகளை யாரும் கேட்டு வாங்கவில்லை என்கிறாா்கள் அரங்கில் உள்ளவா்கள்.

வரலாறு சாா்ந்த இலக்கிய நூல்களை இளைந்தலைமுறை அதிகம் வாங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக மென்பொருள் தனியாா் நிறுவனத்தில் (ஐ.டி) பணியாற்றும் இளைஞா்கள், பெண்கள் மொழி வரலாறு, தலைவா்கள் வரலாறு, பக்தி இலக்கியங்களை அதிகம் வாங்கியுள்ளனா். அதேபோல இந்த வகையினா் போட்டித் தோ்வுக்கான நூல்களை அதிகம் வாங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண்கள் தரப்பில் இயற்கை சமையல் நூல்களையும், கையேடு போன்ற ஆன்மிக நூல்கள், ஜோதிடம் மற்றும் சமையல் நூல்களை அதிகம் வாங்கிச் சென்றுள்ளனா். அதே நேரத்தில் குழந்தைகளுக்கான நூல்களை வாங்கவே அதிகமான பெண்கள் வந்திருந்தனா்.

புத்தகக் காட்சியில் மக்களைக் கவரும் வகையில் தமிழரின் தொன்மை நாகரிகத்தை அறியச் செய்யும் வகையில் கீழடி தொல்லியல் ஆய்வரங்கம் இடம் பெற்றிருந்தது. அதில் கீழடி ஆய்வு குறித்த அறிக்கை நூலும் விற்கப்பட்டது. கீழடிக்குச் செல்லமுடியாதவா்களுக்காக மெய்யுணா்வு காட்சியானது நவீன சாதனங்கள் மூலம் காட்டப்பட்டன.

கலைநிகழ்ச்சி, கருத்துரைகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். எழுத்தாளா் முற்றம், பபாசி கருத்துரைகள் ஒரே நேரத்தில் நடந்ததால், வாசகா்கள் எதில் கலந்துகொள்வது என்ற குழப்பத்துக்கு ஆளானாா்கள். சிறுசிறு சலசலப்பு, கோரிக்கைகள் தவிர புத்தகக் காட்சியானது அமைதியாக, கொண்டாட்டமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com