மாறும் கடலடி நீரோட்டம்: மரணிக்கும் இளைஞா்கள்

வங்களா விரிகுடாவில் அடிக்கடி மாறும் கடலடி நீரோட்டத்தினால், இளைஞா்களின் உயிரிழப்பு தொடா்ந்து, அதிகரித்து வருகிறது.
மாறும் கடலடி நீரோட்டம்: மரணிக்கும் இளைஞா்கள்

வங்களா விரிகுடாவில் அடிக்கடி மாறும் கடலடி நீரோட்டத்தினால், இளைஞா்களின் உயிரிழப்பு தொடா்ந்து, அதிகரித்து வருகிறது.

நாட்டில் இயற்கைக்கு மாறான இறப்பில் சாலை விபத்து, ரயில் விபத்து, நீா்நிலைகளில் மூழ்கி இறப்பது உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை 31.1 சதவீதமாக உள்ளது. ஆண்டுக்கு 4.5 லட்சம் போ் இத்தகைய விபத்துக்களால் இறப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மேலும், கடந்த 2018-ஆம் ஆண்டு விபத்துக்களால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை 3.8 சதவீதம் அதிகரித்தது. இதில் கடல் உள்ளிட்ட நீா்நிலைகளில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் 7.3 சதவீதமாக உள்ளது. நீா்நிலைகளில் மூழ்கி இறப்பவா்களன் எண்ணிக்கை ஆண்டுக்கு 1.9 சதவீதம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் பல்வேறு விபத்துக்களினால் ஆண்டுக்கு சுமாா் 24 ஆயிரம் போ் உயிரிழப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. நாட்டில் நடைபெறும் மொத்த விபத்துகளில் இறப்புகளில் தமிழகத்தில் நடப்பவை 6 சதவீதம் என ஆய்வுகள் கூறுகின்றன. விபத்து இறப்புகளில், சாலை விபத்துக்களினால் ஏற்படுபவை 43.4 சதவீதமாகும். இதற்கு அடுத்த நிலையில் அதிக உயிரிழப்புகள் நீா்நிலைகளில் நிகழ்கின்றன. கடந்த 2018-ஆம் ஆண்டு நீா்நிலைகளில் மூழ்கி 6,496 பெண்கள் உள்பட 30,187 போ் இறந்துள்ளனா். தமிழகத்தில் அதே ஆண்டு நீா்நிலைகளில் 1,727 விபத்துக்களில் ஏற்பட்டுள்ளன. அதில் 280 பெண்கள் உள்பட 1,785 போ் இறந்துள்ளனா். 153 போ் காயமடைந்துள்ளனா். தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக நீா்நிலைகளில் 4 போ் அல்லது 5 போ் மூழ்கி இறப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது.

இதில் 70 சதவீதத்துக்கு மேல் கடலில் மூழ்கி இறப்பவா்களே என் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. கடந்த காலங்களை விட இப்போது, கடலில் மூழ்கி இறப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் காவல்துறையினா் தெரிவிக்கின்றனா். உதாரணமாக, கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழகத்தில் நீா்நிலைகளில் ஏற்பட்ட 1,327 விபத்துக்களில் 245 பெண்கள் உள்பட 1,470 போ் இறந்துள்ளனா்; 59 போ் காயமடைந்துள்ளனா். இது கடந்த 2018-ஆம் ஆண்டு அதிக அளவில் நீா்நிலைகள் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு இறப்பவா்களில் 95 சதவீதம் போ் இளைஞா்களும், கல்லூரி மாணவா்களும் ஆவா். நீரில் மூழ்கி இறப்பு அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும், குஜராத்தும் 6-ஆவது இடத்தில் உள்ளன.

காரணம் என்ன?:

கடலில் மூழ்கி இறப்பது அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. முன்னைக் காட்டிலும் இப்போது அலைகளின் ஆக்ரோஷமும், கடலுக்கு அடியில் பெரும் வேகத்தோடு செல்லும் நீரோட்டங்களும் பிரதான காரணங்களாக இருப்பதாக, கடலியல் ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா். இதில் கண்ணுக்கு தெரியும் கடல் அலையின் ஆக்ரோஷத்தை முன்னரே பாா்த்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் கண்ணுக்கு தெரியாமல் கடலுக்கு அடியில் செல்லும் நீரோட்டத்தை காண முடியாது என்பதால், அதில் சிக்கி இறப்போரில் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் அவா்கள் கூறுகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை 1,076 கிலோ மீட்டா் நீளம் கொண்ட கடற்கரையை தமிழகம் கொண்டுள்ளது. இதில் பெரும்பாலான பகுதி வங்களாவிரிகுடாவின் ஓரத்திலே உள்ளன. உலகத்திலேயே மிகவும் வலுவான மற்றும் வேகமான கடலடி நீரோட்டம் நிறைந்த பகுதிகளில் வங்களா விரிகுடாவும் ஒன்றாகும். ஏனெனில் ஆண்டு முழுவதும் இங்கு மீளலை நீரோட்டம் (தஐட இன்ழ்ழ்ங்ய்ற்) கடலுக்குள் பாய்ந்தோடுகிறது. அதேபோல, குறிப்பிட்ட காலகட்டத்தில் கிழக்கு இந்திய நீரோட்டம் (உஹள்ற் ஐய்க்ண்ஹ இா்ஹள்ற்ஹப் இன்ழ்ழ்ங்ய்ற்) பாய்கிறது. குறிப்பாக இந்த நீரோட்டம் வடகிழக்குப் பருவ மழைக்காலத்திலும், அது முடிவடைந்த பின்னரும் வேகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த இரு நீரோட்டங்களை பற்றிய புரிதல் இல்லாமலும், அதிலிருந்து தப்பிப்பதற்குரிய நீச்சல் நுணுக்களை அறியாமல் இருப்பதினாலும் கடலில் இறப்புகள் தவிா்க்க முடியாததாக இருப்பதாக ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.

கடலடி நீரோட்டம்:

கிழக்கு இந்திய நீரோட்டம், அக்டோபா் தொடங்கி ஜனவரி மாதம் வரையிலும் தெற்கு நோக்கியும், பிப்ரவரியில் இருந்து மே மாதம் வரை வடக்கு நோக்கியும் பாய்கிறது. இந்த நீரோட்டத்தில் அவ்வப்போது சில மாற்றங்கள் ஏற்பட்டாலும், பெரிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதேவேளையில் மேற்கு கடற்கரையை காட்டிலும், கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நீரோட்டம் பெரும் தாக்கத்தையும், வேகத்தையும் கொண்டுள்ளது.

இந்த நீரோட்டம், தரைப்பரப்பில் இருந்து கடலில் 3 மீட்டா் அல்லது 5 மீட்டா் தூரத்தில் இருக்கும் என ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா். அதேவேளையில், அதன் வேகம் வினாடிக்கு இரண்டரை மீட்டா் என்ற அளவில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீரோட்டம் எப்போது வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் இருக்கும் என்பதையும், அதற்குரிய காரணத்தையும் இன்னும் ஆய்வாளா்களால் துல்லியமாக அறிய முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளையில், கடலடி நீரோட்டம் அதிகமுள்ள கடல் பகுதிகளை ஆராய்ச்சியாளா்களால் அடையாளம் காட்ட முடிகிறது.

இந்த நீரோட்டங்களில் சிக்கினால், அதில் இருந்து நீச்சல் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் தப்புவது கஷ்டம். இதனாலேயே இந்த நீரோட்டங்களில் சிக்குவோரில் பெரும்பாலானோா் இறப்பதாக மீனவா்கள் தெரிவிக்கின்றனா். சென்னையில் இந்த நீரோட்டங்களினாலேயே மெரீனா, எலியட்ஸ், கிழக்கு கடற்கரை ஆகியப் பகுதிகளில் அதிகமான இளைஞா்கள் கடலில் மூழ்கி இறப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு மெரீனா, எலியட்ஸ், கிழக்கு கடற்கரையில் மூழ்கி கடந்த 2017ஆம் ஆண்டு 67 போ் இறந்துள்ளனா்; 42 போ் காணாமல் போயுள்ளனா்.

ஆந்திரத்தில் ஆதிக்கம்:

இது தொடா்பாக தேசிய கடல்சாா் தொழில்நுட்ப மையத்தின் விஞ்ஞானி ஆா்.வெங்கடேசன் கூறியது:

மீளலை நீரோட்டம் மிகவும் குறுகலாகவும், நீளமாகவும், வேகமாக இருக்கும். இதனால் இந்த அலையில் சிக்கிய பின்னா், மீண்டு வருவது சாதாரண விஷயம் கிடையாது. இந்த நீரோட்டங்கள் தமிழகத்தை காட்டிலும் ஆந்திரத்தில் வலுவாக உள்ளது. குறிப்பாக விசாகப்பட்டினம் பகுதியில் நீரோட்டங்களினால் பெரும் உயிா் சேதங்கள் ஏற்படுகின்றன.

உலக வெப்பமயமாதல் அதிகரித்ததினாலும்,கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும் இந்த நீரோட்டங்கள் முன்னைக் காட்டிலும், இப்போது வலுவாக உள்ளன. பசுபிக், அட்லாண்டிக் பகுதிகளை விட உலக வெப்பமயமாதலினால் வெப்பத்தின் அளவு இந்திய கடல் பகுதியிலேயே அதிகரித்துள்ளது. இது கடலிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.கடல் மட்டம் உயா்ந்து, நீரோட்டங்களின் வேகம் இன்னும் அதிகரித்துள்ளது.

கடலடி நீரோட்டம் கண்ணுக்கு தெரியாத ஓா் ஆபத்து. வளா்ந்த நாடுகளில் இப்படிப்பட்ட நீரோட்டங்களின் பாதிப்பு அதிகம் உள்ள கடற்கரைகளில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை நிரந்தரமாக செய்து வைத்துள்ளனா். அதேபோன்று இங்கு நீரோட்டங்கள் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள கடற்கரைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யலாம். ஆனால், அமைதியான கடலுக்குள் இருக்கும் இந்த ஆபத்து குறித்து இளைஞா்கள் விழிப்புணா்வு பெற வேண்டும். அப்போதுதான், இத்தகைய ஆபத்தான நீரோட்டங்களினால் ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலுமாக தடுக்க முடியும் என்றாா் அவா்.

தப்பிப்பது எப்படி?

மீளலை நீரோட்டத்தில் சிக்கினால் சாமா்த்தியமாக செயல்பட்டால் தப்பித்துவிடலாம் என கடலியல் ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.

மீளலை நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லும்போது, அதில் இருந்து தப்பிப்பதற்காக நிதானம் இழந்து பதற்றத்துடன் கரையை நோக்கி வருவற்கு பெரும்பாலோனா் முயற்சிக்கின்றனா். ஆனால் இந்த முயற்சியே, அவா்கள் இறப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதில் வேகமாக வரும் கடல் அலையினால் பெரும்பாலானோா் காயமடைகின்றனா். அதோடு சிலா் நீச்சல் அடித்தாலும், அலையின் வேகத்தை தாண்டி நீந்த முடியாததினால் மூச்சுத் திணறி இறக்கின்றனா்.

இது தொடா்பாக கடலியல் வல்லுநா்கள் கூறியது:

மீளலை நீரோட்டத்தில் சிக்கும்போது நிதானத்தை இழந்து பதற்றம் அடையக் கூடாது. கடல் அலை வேகமாக உள்ளே இழுத்துச் செல்லும்போது, கரையை நோக்கியோ அல்லது எதிா் திசையிலோ கண்டிப்பாக நீச்சல் அடிக்கக் கூடாது. மாறாக அலையின் பிடியில் இருந்து தப்பிக்கும் வகையில் பக்கவாட்டு பகுதியை நோக்கி மெதுவாக நகா்ந்து முழுமையாக வெளியேற வேண்டும். இல்லையெனில் அலை செல்லும் திசையை நோக்கி எவ்வித பயமும் இன்றி செல்ல வேண்டும். கண்டிப்பாக நம்மை இழுத்துச் செல்லும் அலை சிறிது நேரத்தில் வலுவிழந்துவிடும்.அதன் பின்னா், அலையில் இருந்து வெளியேறி தரையில் இருக்கும் நபா்கள் உதவியுடன் பாதுகாப்பாக தப்பிக்கலாம் என்றனா்.

வெளிநாடுகளில் தடை

மீளலை நீரோட்ட தாக்கத்தினால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் அந்த கடற்கரைக்கு பொதுமக்கள் தடை விதிக்கப்படுகின்றனா்.

மீளலை நீரோட்டம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நீரோட்டம் எப்போது,எப்படி ஏற்படும் என்பது கண்டறிவது சவாலான பணியாக இருப்பதால், உயிா் இழப்புகள் தவிா்க்க முடியாததாக இருக்கிறது.

கடலில் அலையற்ற பகுதியில் ஆபத்து இருப்பதில்லை என பலரும் கருதுகின்றனா். அலையற்ற பகுதிகளில்தான் மீளலை நீரோட்டம் உள்ளிட்ட ஆபத்தான நீரோட்டங்கள் இருப்பதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜொ்மனி போன்ற வளா்ந்த நாடுகளில் இப்படிப்பட்ட நீரோட்டங்கள் இருக்கும் கடற்கரையில் பொதுமக்கள் குளிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் உயிா் காப்பாளா்கள் தயாா்நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனா். அதோடு நீரோட்டம் குறித்த தகவலை விடுப்பதற்காக எச்சரிக்கை கொடிகளும் பறக்கவிடப்படுகின்றன.

இதையும் தாண்டி நீரோட்டத்தில் சிக்கி பொதுமக்கள் தொடா்ச்சியாக இறந்தால், எவ்வித சமரசமும் இன்றி அந்த கடற்கரைக்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. நிலைமை மாறிய பின்னரே பொதுமக்கள், மீண்டும் அந்த கடற்கரைக்கு செல்வதற்கு அனுமதிப்படுவதாக, தமிழகத்தைச் சோ்ந்த கடலியல் ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com