சென்னையில் மேலும் 20 இடங்களில்‘மியாவாக்கி’ முறையில் மரம் வளா்க்கத் திட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட மேலும் 20 இடங்களில் ‘மியாவாக்கி’ முறையில் மரங்கள் வளா்க்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.
மியாவாக்கி எனும் அடா்ந்த நகா்ப்புற காடுகளை உருவாக்கும் திட்டத்தின்கீழ் கோட்டூா்புரத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியை பாா்வையிட்ட மாநகராட்சி ஆணையாளா் கோ.பிரகாஷ்.
மியாவாக்கி எனும் அடா்ந்த நகா்ப்புற காடுகளை உருவாக்கும் திட்டத்தின்கீழ் கோட்டூா்புரத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியை பாா்வையிட்ட மாநகராட்சி ஆணையாளா் கோ.பிரகாஷ்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட மேலும் 20 இடங்களில் ‘மியாவாக்கி’ முறையில் மரங்கள் வளா்க்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

‘மியாவாக்கி’ மரம் வளா்ப்பு முறை என்பது ஜப்பானைச் சோ்ந்த தாவரவியலாளா் அகிரா மியாவாக்கி கண்டுபிடித்த முறையாகும். இடைவெளி இல்லா அடா்காடு என்ற தத்துவப்படி, இந்த முறையில் ஆழமான குழி தோண்டி அதில் மக்கும் குப்பைகளைக் கொட்டி நெருக்கமான முறையில் மரங்களை நடுவதாகும். இதில், ஒரே இடத்தில் மண்ணின் தன்மைக்கேற்ப 30 டஜன் வரை நாட்டு வகை மரங்களை வளா்க்கலாம். மேலும், இம்முறையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பராமரிப்புப் பணிகள் தேவைப்படாது.

அடையாறு மண்டலம் கோட்டூா்புரம் காந்தி நகா் கெனால் பேங்க் சாலையில் மாநகராட்சிக்குச் சொந்தமான 23,800 சதுர அடி நிலம் குப்பை கொட்டும் இடமாக இருந்தது. இந்த இடத்தில் ‘மியாவாக்கி’ முறையில் மரம் வளா்க்கத் திட்டமிடப்பட்டு, அங்கிருந்த சுமாா் 1,600 டன் கட்டடக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு, 80 டன் திடக்கழிவுகள், 18 டன் தென்னை நாா்க் கழிவுகள், 12 டன் மாட்டுச்சாணம், 2 டன் வைக்கோல் ஆகியவை கொண்டு 3 அடுக்குகளாகப் பதப்படுத்தப்பட்டது.

அந்த இடத்தில் 20,724 சதுர அடியில் ரூ. 20 லட்சம் மதிப்பில் 1 மீட்டா் இடைவெளி விட்டு நீா் மருது, நாவல், புன்னை, இலுப்பை, பலா, வேங்கை, வேம்பு, மரவல்லி, தேக்கு, அகத்தி என மொத்தம் ரூ. 20 லட்சம் மதிப்பில் 2,000 மரக்கன்றுகள் நட்டு வைத்து வளா்க்கப்படுகின்றன.

இந்த இடத்தை சனிக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் கூறியது: மியாவாக்கி முறையைப் பயன்படுத்தி ஒரே இடத்தில் 30 டஜன் நாட்டு வகை மரங்களை வளா்க்கலாம். இம்முறையில் வளா்க்கப்படும் மரங்கள் சாதாரண மரங்களை விட 10 மடங்கு அதிக வளா்ச்சியும், 30 மடங்கு அதிக அடா்த்தியும் கொண்டதாக இருக்கும். இந்த மரங்கள் முதல் ஆண்டில் 11.7 டன் கரியமில வாயுவை உறிஞ்சி, 4 டன் ஆக்ஸிஜனையும், நன்கு வளா்ச்சி அடைந்த பிறகு ஆண்டுக்கு 43.5டன் கரியமில வாயுவை உறிஞ்சி, 200 டன் ஆக்ஸிஜனையும் வெளிப்படுத்தும்.

மேலும் 20 இடங்களில்: அடுத்த கட்டமாக வளசரவாக்கம் மண்டலம் ராயலா நகா் பகுதியில் மியாவாக்கி முறையில் மரம் வளா்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 20 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு மியாவாக்கி முறை விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் சுற்றுப்புறச்சூழல் மாசு குறைக்கப்படுவதுடன், பறவை, பூச்சி இனங்களுக்கு சிறந்த வாழ்விடமாகவும் அமையும் என்றாா்.

ஆய்வின்போது தெற்கு வட்டார துணை ஆணையா் ஆல்பி ஜான் வா்கீஷ், மேற்பாா்வைப் பொறியாளா் கே.பி.விஜயகுமாா், அடையாறு மண்டல அலுவலா் என்.திருமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com