முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
சென்னை கடற்கரை சாலையில் கோலாகலம்: தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் புரோஹித்
By DIN | Published On : 27th January 2020 04:48 AM | Last Updated : 27th January 2020 04:48 AM | அ+அ அ- |

சென்னை: குடியரசு தினத்தை ஒட்டி, சென்னை கடற்கரைச் சாலையில் நடந்த கோலாகலமான விழாவில், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இதைத் தொடர்ந்து, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.
நாட்டின் 71-ஆவது குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. சென்னை கடற்கரை சார்பில் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியேற்றினார்.
பார்வையாளர்கள் உற்சாகம்: சென்னை கடற்கரை சாலையில் காவல் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு எதிரேயுள்ள காந்தி சிலை அருகில் குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முதலில் வந்தார். மோட்டார் பைக்கில் வெண் சீருடையில் காவலர்கள் அணிவகுப்புக்கு மத்தியில் முதல்வர் பழனிசாமி வந்தார். விழா நடைபெற்ற சாலையின் இருமருங்கிலும் குழுமியிருந்த ஏராளமான மக்களுக்கு அவர் தனது வாகனத்தில் இருந்தபடியே கைகளை அசைத்து குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
முதல்வரைத் தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வந்தார். அவருக்கு முப்படையைச் சேர்ந்த வீரர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரும் விழாவைக் காண வந்த மக்களுக்கு வாழ்த்துகளைக் கூறினார். ஆளுநர், முதல்வருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் தங்களது கைகளில் வைத்திருந்த தேசியக் கொடிகளை அசைத்தனர்.
விருதுகள்-பாராட்டு: விழா நடைபெறும் இடத்துக்கு வந்த ஆளுநர் புரோஹித்துக்கு, முப்படைத் தலைவர்கள், காவல் துறை இயக்குநர், சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஆகியோரை முதல்வர் பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். இதன்பின்பு, தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றினார். அப்போது வானில் பறந்தபடி ஹெலிகாப்டர் மலர்களைத் தூவியது. இதைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, ராணுவம், கடற்படை, விமானப் படை, கடலோரக் காவல் படை, முன்னாள் ராணுவத்தினர் படைப் பிரிவு, தமிழக காவல் துறை என 44 படைப் பிரிவுகளின் சார்பில் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் புரோஹித் ஏற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் அளிக்கப்படும் பல்வேறு விருதுகளை முதல்வர் பழனிசாமி அளித்தார். வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், கள்ளச் சாராய ஒழிப்புக்காக காந்தியடிகள் காவலர் பதக்கம், மூன்று சிறந்த காவல் நிலையங்களுக்கான முதல்வரின் விருது, அதிக உற்பத்தியை மேற்கொண்ட விவசாயிக்கான வேளாண்மை சிறப்பு விருது ஆகியவற்றை முதல்வர் வழங்கினார்.
பாரதியாரின் செந்தமிழ் நாடு பாடலுக்கு கல்லூரி, பள்ளி மாணவிகளின் நடனம் நடைபெற்றது. தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் தமிழகம் உள்பட நான்கு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் கிராமியக் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதன்பின், 16 அரசுத் துறைகளின் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, தேசிய கீதம் இசைக்க விழா நிறைவடைந்தது.
சென்னை மெரீனாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், தலைமைச் செயலர் க.சண்முகம், தமிழக காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன் உள்ளிட்டோர்.