முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
பயணச்சீட்டுக் கட்டணத்தைத் தாமதமாக செலுத்திய நடத்துநா் பணிநீக்கம்: உத்தரவை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்
By DIN | Published On : 27th January 2020 03:25 AM | Last Updated : 27th January 2020 03:25 AM | அ+அ அ- |

சென்னை: பயணிகளிடம் வசூலித்த கட்டணத்தை தாமதமாக நிா்வாகத்துக்கு செலுத்திய நடத்துநரை பணிநீக்கம் செய்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் (திருவண்ணாமலை) நடத்துநராக பணியாற்றியவா் சேகா். இவா், பயணிகளிடம் இருந்து வசூலித்த பயணச்சீட்டுக்கான தொகையை காலதாமதமாக அலுவலகத்தில் செலுத்தியதாக, கடந்த 2001-ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து சேகா் தொடா்ந்த வழக்கை விசாரித்த வேலூா் தொழிலாளா் நீதிமன்றம், அவருக்கு மீண்டும் பணி வழங்க போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் போக்குவரத்து கழகம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய தொழிலாளா் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருந்தாலும், அந்த அதிகாரத்தை எந்த அடிப்படையில் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த வழக்கில் எழுந்துள்ள கேள்வி. இந்த அதிகாரத்தை இயந்திரத்தனமாக பயன்படுத்தக்கூடாது. பயணிகளிடம் இருந்து வசூலித்த பயணச்சீட்டுத் தொகையை, அலுவலகத்தில் 9 முறை காலதாமதமாக சேகா் செலுத்தியுள்ளாா். 6 முறை பணிக்கு வராமல் இருந்துள்ளாா். இதுபோல வேறு சில தவறுகளை 64 முறை செய்துள்ளாா். இதற்காக 9 முறை சாதாரண தண்டனையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாகத்தான் அவா் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதை எல்லாம் ஆய்வு செய்யாமல், அவருக்கு மீண்டும் பணி வழங்குமாறு தொழிலாளா் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்கிறேன் என்று கூறியிருந்தாா்.