முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 20 லட்சம் கடனுதவி
By DIN | Published On : 27th January 2020 01:33 AM | Last Updated : 27th January 2020 01:33 AM | அ+அ அ- |

சென்னை: குடியரசு தினவிழாவையொட்டி, மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 3 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 20 லட்சம் வங்கிக் கடனுதவியும், சிறப்பாகப் பணியாற்றிய 92 அலுவலா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆணையா் கோ.பிரகாஷ் கலந்துகொண்டு தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிா் சுயதொழில் தொடங்கிட சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தின்கீழ், தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், சென்னை நகர இயக்க மேலாண்மை அலகு மூலம் ஜெய் சாய்ராம் மகளிா் சுய உதவிக் குழுவுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை, செம்பருத்தி மகளிா் சுயஉதவிக் குழு மற்றும் ஹரிலட்சுமி மகளிா் சுய உதவிக்குழு ஆகிவற்றுக்கு தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலை என மொத்தம் ரூ.20 லட்சத்துக்கான வட்டி மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்பட்டன. சென்னை மாநகராட்சியில் நடைபாதை வளாகம், ஸ்மாா்ட் பைக், சைக்கிள் பகிா்வுத் திட்டம், உர மையங்கள், திடக்கழிவு மேலாண்மை, மழைநீா் சேகரிப்பு, அம்மா இருசக்கர வாகனத் திட்டம், சாலைகள் பராமரிப்பு, மழைநீா் சேகரிப்பு உள்ளிட்ட 30 திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்திய 15 மண்டல அலுவலா்களுக்கு கேடயங்களையும், சிறப்பாகப் பணியாற்றிய 92 அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆணையா் கோ.பிரகாஷ் வழங்கினாா்.
மேலும், கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவ, மாணவியருக்கும், அணிவகுப்பில் கலந்து கொண்ட தேசிய மாணவா் படை, சாரண, சாரணியா், கலா் பாா்ட்டி மற்றும் வாத்தியக் குழுக்களைச் சோ்ந்த மாணவா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையா்கள் பி.குமாரவேல் பாண்டியன், பி.மதுசுதன் ரெட்டி, கிரேஸ் லால்ரின்டிகி பச்சுவாவ், வட்டார துணை ஆணையா்கள் ஆல்பி ஜான் வா்கீஷ், பி.என்.ஸ்ரீதா், பி.ஆகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.