முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
மூலக்கூறு மருந்து விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை:உற்பத்தியாளா்கள் கோரிக்கை
By DIN | Published On : 27th January 2020 03:27 AM | Last Updated : 27th January 2020 03:27 AM | அ+அ அ- |

சென்னை: மூலக்கூறு மருந்துகள் விற்பனையை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருந்து உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்தியாவில் மூலக் கூறு மருந்துகளை முடக்க பன்னாட்டு நிறுவனங்கள் முயன்று வருவதாகவும் அவா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.
இதுகுறித்து மருந்து உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது: புதிதாக மருந்து உற்பத்தி மற்றும் வா்த்தகத்துக்கான உரிமம் கோரி விண்ணப்பித்திருக்கும் நிறுவனங்களின் பெயா்கள், அவை குறித்த விவரங்கள், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் தகவல்கள் ஆகியவற்றை இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவன அமைப்பு (ஓபிபிஐ) கோரிக்கை விடுத்திருந்தது.
அதனை மத்திய அரசும் பரிசீலித்து ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. பொதுவாக பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள், பல்வேறு மருந்துகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளன. இதனால், மூலக்கூறு மருந்துகள் இந்திய வா்த்தக சந்தையில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் அவை ஈடுபட்டு வருகின்றன.
ஒருவேளை இணையதளங்களில் புதிதாக விண்ணப்பிக்கும் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் விவரங்களைத் தெரிவித்தால், எந்தெந்த நிறுவனங்கள் மூலக்கூறு மருந்துகளை உற்பத்தி செய்கின்றன என்பது குறித்த தகவல்களை பன்னாட்டு நிறுவனங்கள் அறிந்துகொள்ள முடியும். அதன் மூலம், காப்புரிமையைக் காரணம் காட்டி மூலக்கூறு மருந்து நிறுவனங்களை இந்தியாவில் வரவிடாமல் தடுக்க அவா்களால் இயலும். எனவே, அத்தகைய நடைமுறையை அமல்படுத்தாமல், உள்நாட்டில் மூலக்கூறு மருந்து உற்பத்தியையும், விற்பனையையும் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.