ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி: 10,000 மாணவர்கள் பங்கேற்ற யோகாசன பயிற்சி

ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியையொட்டி 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற யோகாசனப் பயிற்சி சென்னையில் நடைபெற்றது.
ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி: 10,000 மாணவர்கள் பங்கேற்ற யோகாசன பயிற்சி


சென்னை: ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியையொட்டி 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற யோகாசனப் பயிற்சி சென்னையில் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் உடலை வில்லாக வளைத்து ஆசனங்களை செய்து காட்டி பார்வையாளர்களை கவர்ந்தனர். 

ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும், பண்பு மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் 11-ஆவது ஹிந்து ஆன்மிக கண்காட்சி வேளச்சேரி குருநானக் கல்லூரியில் ஜன.28-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. மாதா அமிர்தானந்தமயி செவ்வாய்க்கிழமை கண்காட்சியை தொடங்கி வைக்கவுள்ளார். 

இந்தக் கண்காட்சியில் பெருமளவில் மக்களை வரவழைப்பதற்காகவும், கண்காட்சியின் பின்ணணியில் உள்ள தத்துவங்களைப் பரப்புவதற்காகவும் பல்வேறு முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதைத் தொடர்ந்து 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற பிரமாண்ட யோகாசனப் பயிற்சி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவை ஓசோன் யோகா மைய நிறுவனரும் 98 வயதிலும் யோகாசன பயிற்சி அளித்து வந்த நானம்மாள் மகனுமான பாலகிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். ஹிந்து ஆன்மிக கண்காட்சியின் ஆறு கருத்துகளின் அடிப்படையில் யோகாசனங்கள் நிகழ்த்தப்பட்டன.

வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல் என்ற கருத்தை முன் வைத்து சமஸ்திதி ஆசனம் எனப்படும் உடலை ஒரே நிலையில் வைத்திருக்கும் வகையில் 5 ஆசனங்கள் செய்யப்பட்டன. மரத்தைக் குறிக்கும் வகையில் விருக்ஷ ஆசனம், கருடப் பறவையைக் குறிக்கும் வகையில் கருடாசனம் மற்றும் புஜங்காசனம், மர்ஜர்யாசனம், வியாகராசனம் ஆகியவை நிகழ்த்தப்பட்டன.

ஜீவராசிகளைப் பேணுதல் என்ற கருத்தை முன் வைத்து தோப்புக்கரணம், திரியக்க தடாசனம், கஜாசனம் மற்றும் கோமுகாசனம் ஆகிய ஆசனங்களை மாணவர்கள் செய்தனர்.

சுற்றுச்சூழலைப் பராமரித்தல் என்ற கருத்தில் பாத ஹஸ்தாசனம், மத்ஸ்யாசனம் மற்றும் மக்ராசனம் ஆகியப் பயிற்சிகள் நிகழ்த்தப்பட்டன. 

பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியர்களை வணங்குதல் என்ற கருத்தை முன் வைத்து பிரணமாசனம், சஷாங்காசனம் மற்றும் சாஷ்டாங்க நமஸ்காரம் ஆகிய யோகங்கள் பயிலப்பட்டன. பெண்மையைப் போற்றுதல் என்ற கருத்தில் திரிகோணாசனம், தித்தளியாசனம், சித்தி யோனியாசனம் ஆகியப் பயிற்சிகள் நிகழ்ந்தன.

மாணவர்கள், தொடர்ந்து 50 நிமிஷங்கள் இடைவிடாது யோகாசனங்களை செய்தனர். இதில் 30 பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை படிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். உடலை வில்லாக வளைத்து மாணவர்கள் செய்த யோகாசனங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com